மக்கள் சொந்த வீடுகளைப் பெறுவதற்கு கட்டுக்கோப்பான திட்டமிடல் அவசியம் பிரதமர் வலியுறுத்தல்

புத்ராஜெயா, 

வாங்கும் சக்திக்குட்பட்ட வீடுகள் விவகாரத்தில் திட்டமிடல் முதல் அதன் நிறைவுப்பணிகள் வரை நிதி, உரிமை, வாடகை, நிர்வாகம் ஆகிய அம்சங்களில் அதீத கவனம் செலுத்தப்படுவது உறுதி செய்யப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார். தேசிய வாங்கும் சக்திக்குட்பட்ட வீடமைப்பு மன்றத்திற்குத் தலைமையேற்றுள்ள அன்வார் இதன் தொடர்பான விவாதப் பேச்சுவார்த்தையில் நேற்றுக் கலந்து கொண்டார்.

வீடமைப்பு ஊராட்சித்துறை அமைச்சின் வழி இந்தத் திட்டம் மேற்கொள்ளப்படவிருக்கிறது. பி40, எம்40 பிரிவினரைச் சேர்ந்தவர்கள் உட்பட மலேசியர்களின் அனைத்துத் தரப்பினரின் வீட்டுத் தேவைகளை நிறைவு செய்யும் கடப்பாட்டை எவ்வித சமரசமும் இன்றி தம்முடைய அமைச்சு கொண்டிருக்கும் என்று அதன் அமைச்சர் ஙா கோர் மிங் திட்டவட்டமாகக் கூறினார்.

மலேசிய மடானி அரசாங்கம், வீடமைப்பு ஊராட்சித்துறை அமைச்சின் கீழ் இத்திட்டத்தை மிகக் கவனமாகத் திட்டமிட்டு அமல்படுத்தும் இலக்கைக் கொண்டிருக்கிறது. இதன் தொடர்பில் பல்வேறு தரப்பினருடன் பல சந்திப்புகளை அமைச்சு நடத்தி வருகிறது. இதில் வீட்டு வாடகைச் சட்டம் திருத்தப்பட்டு புதிய சட்டம் உருவாக்கப்படுவதும் அடங்கும் என்று அவர் தெரிவித்தார்.

1966 வீடமைப்பு மேம்பாட்டுச் (கட்டுப்பாடு, லைசென்ஸ்) சட்டம் (சட்டம் 118), 2013 அடிப்படை வசதிகள் சட்டம் (சட்டம் 757) ஆகியவற்றில் மாற்றங்கள் செய்து மக்களுக்கு எளிதான முறையில் வீட்டு வசதிகளை வழங்குவதற்குரிய திருத்தங்கள செய்யப்படுவது குறித்தும் பல்வேறு கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு வருகின்றன என்று ஙா கோர் மிங் கூறினார்.

இந்நிலையில் நகர் மறு மேம்பாட்டுத் திட்ட மசோதா வரும் அக்டோபர் 6ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவையில் அதன் இரண்டாவது வாசிப்புக்கு சமர்ப்பிக்கப்படும். ஏற்கெனவே 2025 ஆகஸ்டு 27ஆம் தேதி இரண்டாவது வாசிப்பு சமர்ப்பிப்பு ஒத்திவைக்கப்பட்டது. ஒரு பகுதியை முறையாகத் திட்டமிட்டு மிகவும் நேர்த்தியாக ஒரு நகருக்கு அழகு சேர்க்கக்கூடிய வகையில் வீடமைப்புத் திட்டங்களை மேற்கொள்வதற்கு இச்சட்டம் அவசியமாகிறது என்று இங்கு தேசிய சக்திக்குட்பட்ட வீடமைப்பு மன்றத்தின் கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் ஙா கோர் மிங் இதனைத் தெரிவித்தார்.

இதனிடையே ஆர்எம்ஆர் எனப்படும் ரூமா மெஸ்ரா ராக்யாட் வீட்டுடைமைத் திட்டமானது தனியார், அரசாங்கம், அரசு சாரா இயக்கங்கள் ஆகியவற்றின் ஒத்துழைப்போடு வீடுகள் கட்டப்படுவது தீர்மானிக்கப்படும். இந்த வீடுகளுக்கான விண்ணப்பங்கள் மிக மிக அதிகமாக இருப்பதால் அதற்கேற்றவாறு திட்டமிடப்பட வேண்டியது அவசியமாகிறது என்று அவர் கூறினார்.

13ஆவது மலேசியத் திட்டத்தின் கீழ் வீட்டுடைமைத் திட்ட அமலாக்க அந்தஸ்து குறித்து குறிப்பிட்ட அவர், 2025 ஜூன் 30ஆம் தேதி வரை 98.8 விழுக்காடு அல்லது 493,874 வாங்கும் சக்திக்குட்பட்ட வீடுகள் கட்டி முடிக்கப்பட்டிருக்கின்றன.  இன்னும் 6,126 வீடுகள் கட்டி முடிக்கப்பட இருக்கின்றன. இவ்வாண்டு இறுதிக்குள் அவற்றின் பணிகள் முழுமைபெறும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

அதேசமயத்தில் வீட்டுக்கடன் உத்தரவாதத் திட்டம் குறித்து விளக்கமளித்த அவர், 2025 ஜூலை 31ஆம் தேதி வரை 93,231 விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. இதற்கான மொத்த உத்தரவாதக் கடன் தொகை 22.138 பில்லியன் ரிங்கிட்டாகும். இதில் 67 விழுக்காட்டினர் 3 லட்சம் ரிங்கிட்டிற்குக் கீழ் மதிப்புள்ள வீடுகளை வாங்குவதற்கு மனுச் செய்தவர்களாவர். அரசாங்கத்தின் சொந்த வீடுகளை மக்கள் கொண்டிருக்க வேண்டும் என்ற இலக்கிற்கேற்ப பி40 பிரிவினருக்கு இத்திட்டத்தின் கீழ் முன்னுரிமை அளிக்கப்பட்டிருக்கிறது என்று ஙா கோர் மிங் கூறினார்.

அதேசமயம் கடன் வாங்கி இருப்பவர்கள் அதனைத் திருப்பிச் செலுத்துவதில் முறையான நிதி நிர்வாகத்தைத் தெரிந்து வைத்திருப்பது அவசியம் என்பதை வலியுறுத்திய அவர், இதன்வழி தடுமாற்றம் ஏதுமின்றி முறையாக வீட்டுக் கடனைச் செலுத்த முடியும் என்று சொன்னார்.

 இந்தக் கூட்டத்தில் மாநில மந்திரி பெசார்கள், முதலமைச்சர்கள், மாநில வீடமைப்பு ஊராட்சித்துறை ஆட்சிக்குழு உறுப்பினர்கள், அமைச்சரவை அமைச்சர்கள், தனியார்துறை வீட்டு மேம்பாட்டாளர்கள், மத்திய அரசாங்கத்தின் வீட்டுத்துறை ஏஜென்சிகளின் பிரதிநிதிகள், மாநில அரசாங்கங்களின் பிரதிநிதிகள், ஏஜென்சிகளின் பிரதிநிதிகள் ஆகியோர் பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here