போர்ட் கிள்ளானில் மின்னணுக் கழிவுகள் மற்றும் அலுமினிய ஸ்கிராப் அடங்கிய 11 கன்டெய்னர்கள் பறிமுதல்!

போர்ட் கிள்ளான், பிப்ரவரி 24, 2026:

போர்ட் கிள்ளான் மேற்குத் துறைமுகத்தில் (West Port) நடத்தப்பட்ட அதிரடிச் சோதனையில், சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட மின்னணுக் கழிவுகள் (e-waste) மற்றும் அலுமினிய ஸ்கிராப் அடங்கிய 11 கன்டெய்னர்கள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன.

எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு முகமை (MCBA) தலைமையில் இன்று காலை சுமார் 9 மணியளவில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது என்று, போர்ட் கிள்ளான் கமாண்டர் டத்தோ நிக் எசானி முகமட் பைசல் கூறினார்.

இந்தச் சோதனையில் சுங்கத்துறையின் கன்டெய்னர் கட்டுப்பாட்டுப் பிரிவு, SIRIM, போர்ட் கிள்ளான் ஆணையம் மற்றும் சிலாங்கூர் சுற்றுச்சூழல் துறை (DOE) ஆகியவை இணைந்து செயல்பட்டன.

துறைமுகத்தின் ஸ்கேனிங் சிஸ்டம் மூலம் சந்தேகத்திற்குரியதாகக் கண்டறியப்பட்ட 11 கன்டெய்னர்களைச் சோதனையிட்டபோது, அவற்றில் மின்னணுக் கழிவுகள் மற்றும் அலுமினியக் கழிவுகள் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட இந்தக் கழிவுகளின் மொத்த எடை 281,874 கிலோகிராம் ஆகும்.

சட்டவிரோதக் கழிவுகள் மலேசியாவிற்குள் நுழைவதைத் தடுக்கவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யவும் இத்தகைய தீவிரக் கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here