சபா தேர்தல்: அனைத்து 73 சட்டமன்றத் தொகுதிகளிலும் பாரிசான் நேஷனல் போட்டியிடாது: ஜாஹிட்

சபாவில் நடைபெறவுள்ள மாநில தேர்தலில் அனைத்து 73 இடங்களிலும் போட்டியிட பாரிசான் நேஷனல் (BN) எண்ணம் கொண்டிருக்கவில்லை  என அதன் தலைவர் அஹமட் ஜாஹிட்  ஹமிடி தெரிவித்தார். ஆனால், 2020 ஆம் ஆண்டு மாநில தேர்தலில் பெற்ற 14 இடங்களை விட அதிக இடங்களில் இம்முறை பாரிசான் நேஷனல் போட்டியிடும் எனவும் அவர் கூறினார். வெற்றிப் பெற்ற அந்த 14 இடங்களில் ஆறு இடங்களை பாரிசான் நேஷனல் துரோகத்தால் இழந்தது.

எத்தனை இடங்களில் போட்டியிடப்போகிறோம் என்பதை இறுதி செய்யப்பட்ட பின் அறிவிப்பேன். புதிய இடங்களிலும் போட்டியிடுவோம். அவற்றில் பெரும்பாலானவை BN-க்கு சாதகமாக இருக்கும் என நம்புகிறோம் என்று சினார் ஹரியான் தெரிவித்துள்ளது. அம்னோ, பாரிசான் நேஷனல் வெற்றி பெறும் சாத்தியம் அதிகம் உள்ள இடங்களை அடையாளம் கண்டுள்ளதாக ஜாஹிட் கூறினார்.

மேலும், சபாவில் “மூன்றாவது சக்தி” உடன் இணைந்து செயல்படுவதாகவும், அதனால் போட்டியிடும் இடங்களில் BN வேட்பாளர்களுக்கு ஆதரவு அதிகரிக்கும் எனவும் தெரிவித்தார். ஆனால், அந்த “மூன்றாவது சக்தி” எந்தக் கட்சிகள் என்பதை வெளிப்படுத்தவில்லை.

பக்காத்தான் ஹரப்பானுடன் நடக்கும் இட ஒதுக்கீட்டு பேச்சுவார்த்தைகள் குறித்து கேட்கப்பட்டபோது, மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்ட பின் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும், அதனால் மோதல்கள் தவிர்க்கப்படலாம் என்றும் அவர் கூறினார். சபா சட்டமன்றத்தின் காலம் நவம்பர் 11ஆம் தேதி முடிவடைகிறது. அதற்கு முன் கலைக்கப்படாவிட்டால், 60 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here