பிள்ளைகளுக்கு தண்டனைக்கு பதிலாக ஆலோசனையும் மறுவாழ்வும் வழங்கப்படும்: பெண், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சு

பெட்டாலிங் ஜெயா:

விருப்பத்துடன் பாலியல் உறவில் ஈடுபடும் பிள்ளைகளை தண்டிப்பதற்குப் பதிலாக, அவர்களுக்கு தேவையான ஆலோசனை, கல்வி, ஆதரவு வழங்கி, அவர்கள் திருந்தி வாழ்க்கையை மீண்டும் தொடங்குவதற்கான வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்று பெண், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.

அமைச்சர் நான்சி ஷுக்ரி, செப்டம்பர் 24 (புதன்கிழமை) வெளியிட்ட அறிக்கையில்,

“பாலினம் எதுவானாலும், அனைத்து பிள்ளைகளும் தங்கள் தவறுகளிலிருந்து கற்றுக்கொண்டு, குற்ற உணர்ச்சியின்றி தங்கள் வாழ்க்கையை மீண்டும் அமைத்துக்கொள்ளும் வாய்ப்பு பெற வேண்டும்,”
என்று கூறினார்.

அவர் மேலும், பிள்ளைகளின் உணர்ச்சி, அறிவாற்றல் மற்றும் சமூக வளர்ச்சி ஆகிய அம்சங்களை கருத்தில் கொண்டு இந்த பிரச்சினையை அணுக வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அமைச்சு, தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்களும் திட்டங்களும் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடும் பிள்ளைகளின் பாதுகாப்பும் மறுவாழ்வும் மீது கவனம் செலுத்துவதாகவும் தெரிவித்தது. இதில் சமூக அடிப்படையிலான மறுவாழ்வு, அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகள் மற்றும் மறுவாழ்வு நிலையங்கள் போன்றவற்றின் பங்கும் அடங்கும்.

மேலும், பிள்ளைகளை வழிநடத்தி பாதுகாப்பது பெரியவர்களின் முதன்மையான கடமை. எந்த சூழ்நிலையிலும் அவர்களைத் தவறாக வழிநடத்தக் கூடாது,
என்று அமைச்சு தெரிவித்தது.

அதே நேரத்தில், பிள்ளைகளைத் தவறாக வழிநடத்தும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் எச்சரித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here