மலேசியாவில் பொருளாதார ரீதியில் வளர்ச்சி பெற்ற மாநிலம் ஜோகூர்; பிரதமர் புகழாரம்

ஜோகூர் :

ஜோகூர் மாநிலம் அடுத்த ஓரிரு ஆண்டுகளில் மலேசியாவின் ஆகக் கூடிய பொருளாதார வளர்ச்சி பெற்ற மாநிலமாக விளங்கும் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளாதார வட்டாரம், ஃபாரஸ்ட் சிட்டியில் உள்ள சிறப்பு நிதி வட்டாரம் ஆகிய திட்டங்களால் மாநிலத்தின் பொருளியல் வலுவான வளர்ச்சி காணும் என்று அவர் கூறினார்.

“இவ்விரு திட்டங்களும் ஜோகூரின் பொருளியல் வளர்ச்சியை விரைவுபடுத்தும்,” என்று நேற்று (ஏப்ரல்18) நடந்த ஓர் சந்திப்பில் செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

ஜோகூர் பாருவில் உள்ள அங்சானா கடைத்தொகுதியில் ‘மடானி அய்டில்ஃபிட்ரி 2024’ கொண்டாட்டத்தின் தொடக்க நிகழ்ச்சியின்போது அன்வார் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

மலேசியாவும் சிங்கப்பூரும் கடந்த ஜனவரி 11ஆம் தேதி, ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் வட்டாரம் அமைப்பதன் தொடர்பில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

முன்னதாக, சென்ற ஆண்டு அக்டோபரில் இரு நாட்டுப் பிரதமர்களுக்கும் இடையிலான ஓய்வுதளச் சந்திப்பில் இத்திட்டம் தொடர்பில் இணக்கம் காணப்பட்டது.

ஜோகூர் மாநிலம் அதன் பொருளியலை மேம்படுத்தும் வேளையில் மக்கள் நலனையும் உறுதிசெய்ய வேண்டியதன் அவசியத்தை பிரதமர் வலியுறுத்தினார்.

“முதல்வர் ஓன் ஹஃபிஸ் காஸியைச் சந்தித்துப் பேசினேன். மாநிலத்தில் 2,000க்கும் குறைவானோரே மிக ஏழ்மையான நிலையில் இருப்பதாக என்னிடம் தெரிவிக்கப்பட்டது. குறுகிய காலத்தில் இதற்குத் தீர்வுகாண்போம் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது,” என்று அவர் கூறினார்.

வெள்ளம் ஏற்படும் சூழலில் ஜோகூர் மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

பெரிய வெள்ளங்கள் ஏற்படும் சூழலில் பொருளியல் வளர்ச்சி சாத்தியமாகாது. மக்களின் சிரமங்களைத் தணிப்பதற்குத் தேவைப்படும் அனைத்து நடவடிக்கைகளும் விரைந்து மேற்கொள்ளப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என்று அன்வார் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here