B40 இந்திய சமூகத்தை மேம்படுத்துவதற்கான ஐந்து திட்டங்கள் விரைவில் செயல்படுத்தப்படும்

கோலாலம்பூர்:

இந்திய சமுதாயத்தின் நலனை முன்னிருப்பாகக் கொண்ட ஐந்து பிரதான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் அறிவித்தார்.

இந்திய சமுதாயத்திற்கான திட்ட அமலாக்கக் குழுவின் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பல அமைச்சுகள், அரசு துறைகள் மற்றும் தொடர்புடைய அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

ரமணன் தெரிவித்ததாவது:

“இந்திய சமுதாய நலனை மையமாகக் கொண்ட நான்கு பிரதான திட்டங்களுக்கு இக்கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டங்கள் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டு, அடுத்த கட்ட நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்படும்.”

ஒப்புதல் பெற்ற முக்கிய திட்டங்கள்:

  1. ஊராட்சித் துறை வீடமைப்பு திட்டம்:

    • ஊராட்சித் துறையின் கீழ் 30 வீடமைப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளது.

    • இதில் 21 இந்திய பாரம்பரியக் கிராமங்கள் அடங்கும்.

    • இத்திட்டம் உடனடியாக தொடங்கப்படும்.

  2. தமிழ்ப்பள்ளிகளுக்கு ஸ்மார்ட் போர்டுகள்:

    • கல்வியமைச்சின் யாயாசான் டீடிக் வாயிலாக கிட்டத்தட்ட 400 ஸ்மார்ட் போர்டுகள் தமிழ்ப்பள்ளிகளுக்கு வழங்கப்படவுள்ளன.

    • பள்ளிகளின் தேவைகளை கருத்தில் கொண்டு அவை பகிர்ந்தளிக்கப்படும்.

  3. தோட்டத் தொழிலாளர்களின் வீடு பழுது பார்க்கும் திட்டம்:

    • பிரதமர் அறிவித்த இந்தத் திட்டம் குறித்து தோட்டம், மூலப்பொருள் அமைச்சு, நிதியமைச்சு ஆகியவற்றின் பிரதிநிதிகளுடன் விவாதிக்கப்பட்டது.

    • மேலும் NUPW, தேசிய நில நிதி கூட்டுறவு கழகம் உட்பட பல அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

  4. ஆலயங்களுக்கு நிதியுதவி:

    • இந்திய சமுதாய மக்கள் பயன்பெறும் வகையில் சுமார் 1,000 ஆலயங்களுக்கு தலா RM20,000 நிதியுதவி வழங்கப்படும்.

    • இதற்கான விண்ணப்பங்கள் விரைவில் திறக்கப்படும்.

  5. உயர் கல்வி மாணவர்களுக்கு நிதியுதவி:

    • அரசு மற்றும் தனியார் உயர் கல்விக் கூடங்களில் பயிலும் இந்திய மாணவர்களுக்கு மித்ரா வாயிலாக நிதியுதவி வழங்கப்படும்.

    • பிரதமரின் ஒப்புதலுக்குப் பிறகு இதற்கான விண்ணப்பங்கள் திறக்கப்படும்.

ஆய்வில் உள்ள திட்டம்:

  • ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளியில் பயிலும் இந்திய மாணவர்களுக்கு ‘மீண்டும் பள்ளிக்கு போகலாம்’ உதவி நிதி வழங்கும் திட்டம் குறித்து ஆலோசனை நடைபெற்றுள்ளது.

  • ஆனால் இதற்கான இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை.

இவ்வாறு, இந்திய சமுதாய நலனை அடிப்படையாகக் கொண்ட பல திட்டங்களை அரசாங்கம் நிச்சயமாக அமல்படுத்தும் என டத்தோஸ்ரீ ரமணன் வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here