கோலாலம்பூர் :
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இஸ்ரேல் உட்பட 20 வெளிநாட்டு வங்கிகளில் வைத்திருக்கும் கணக்குகள் தொடர்பான குற்றச்சாட்டுகளில், எந்த ஊழல் அல்லது அதிகார துஷ்பிரயோகம் தொடர்பான ஆதாரமும் இல்லை என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) மீண்டும் உறுதி செய்துள்ளது.
MACC வெளியிட்ட அறிக்கையின்படி, 1999 ஆம் ஆண்டு அன்வாரின் வாங்கிக்கணக்குகளில் முறைகேடு அல்லது ஊழல் நடந்துள்ளது என எழுந்தஹா அந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டது. ஊழல் தடுப்பு நிறுவனம் (ACA) மேற்கொண்ட விசாரணையில், அன்வாரை குறித்த குற்றச்சாட்டுகளுடன் இணைக்கும் எந்த ஆதாரமும் இல்லை என்று முடிவு செய்யப்பட்டது.
இந்த முடிவுகள், முன்னாள் ACA விசாரணை இயக்குனர் டத்தோ அப்துல் ரசாக் இட்ரிஸ் 2009 ஆம் ஆண்டில் வெளியிட்ட சட்டப்பூர்வ அறிவிப்பிலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
2013-ஆம் ஆண்டு நாடாளுமன்றக் கூட்டத்தில் எழுப்பப்பட்ட அதே கூற்றுகளை அடிப்படையாகக் கொண்டு, சமீபத்தில் TikTok-இல் பரவிய உள்ளடக்கத்தை MACC கவனத்தில் கொண்டதாகவும் அது தெரிவித்துள்ளது.
மேலும், நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு மாறாக, அன்வாரின் பெயரில் எந்தவொரு வங்கிக் கணக்கு பட்டியலையும் வெளியிட விக்கிலீக்ஸ் மறுத்தது எனவும் MACC நினைவூட்டியது.
“ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைப் பரப்ப வேண்டாம். இத்தகைய தவறான தகவல்கள் சமூகத்தை தவறாக வழிநடத்தி, பொதுமக்களின் நம்பிக்கையை சீர்குலைத்து, பொது ஒழுங்கை பாதிக்கக்கூடும்,” என்றும் MACC எச்சரித்தது.





















