ஜோகூர்: நில அதிர்வு அபாயம் – கட்டடங்கள் பாதுகாப்பை மறுஆய்வு செய்ய உத்தரவு

ஜோகூர் பாரு:

நில அதிர்வு ஏற்பட்டால் சேதத்தைத் தடுக்க நகரிலுள்ள அனைத்து கட்டடங்களும் வலுவாக உள்ளதா என்பதை உறுதிசெய்வது அவசியம் என ஜோகூர் மந்திரி பெசார் ஹஃபிஸ் அகமட் தெரிவித்துள்ளார்.

இதற்காக நகர மன்றத்திற்கு உடனடி மறுஆய்வை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

மலேசிய வானிலைத் துறை தகவலின்படி, கடந்த சனிக்கிழமை (செப்டம்பர் 27) ஜோகூரிலிருந்து பத்து பகாட்டுக்கு அப்பால் கடற்பகுதியில் 3.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. ஆகஸ்ட் மாத இறுதியிலிருந்து சிறிய நில அதிர்வுகள் தொடர்ச்சியாக ஜோகூர் மாநிலத்தை உலுக்கி வருகின்றன.

கட்டடங்களின் பாதுகாப்பு மதிப்பீட்டில் பொதுப் பணி துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு துறை, வானிலைத் துறை, கனிமவள மற்றும் நில அறிவியல் துறை ஆகியவை இணைந்து செயல்பட உள்ளன. அதோடு, உயர்கல்வி நிறுவன வல்லுநர்களும் இந்த மதிப்பீட்டில் பங்கேற்பார்கள்.

மறு ஆய்வில் உயரமான கட்டடங்களோடு, பொது நிலையங்கள், வர்த்தக வளாகங்கள், கல்வி நிறுவனங்கள், குடியிருப்பு பகுதிகள் போன்றவை அனைத்தும் அடங்கும்.

“தற்போதைய கட்டடங்களும், புதிய திட்டங்களும் நில அதிர்வுகளை எதிர்கொள்ள வலுவாக இருக்க வேண்டும். அதற்கான தொழில்நுட்ப வழிகாட்டி நெறிமுறைகளை உருவாக்குவதே எங்கள் இலக்கு,” என்று ஹஃபிஸ் அகமட் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here