கோலாலம்பூர் அக்டோபர் 8 –
இன்று அதிகாலை, கெலாங் பாத்தா (Gelang Patah) பகுதியில் உள்ள மலேசிய கடல்சார் அமலாக்க ஏஜென்சியின் (MMEA) படகு துறைக்கு அருகில், வெளிநாட்டவர்கள் பயணித்த படகு ஒன்று கடல் காவல் துறைக்குச் (Marine Police) சொந்தமான கப்பலுடன் மோதியதில், 10 வெளிநாட்டவர்கள் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்களில் ஐந்து இந்தோனேசிய ஆண்கள், நான்கு இந்தோனேசியப் பெண்கள், ஒரு ரோஹிங்கியா பெண் ஆகியோர் அடங்குவர். அதிகாலை சுமார் 3.58 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
இதனிடையே சம்பவத்தைத் தொடர்ந்து பொது தற்காப்புப் படை, கடல் காவல் துறை, சுல்தானா அமினா மருத்துவமனை (HSA), செயின்ட் ஜான் ஆம்புலன்ஸ் ஆகிய மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உடனடிச் சிகிச்சை அளிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக சுல்தானா அமினா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இஸ்கண்டார் புத்திரி காவல்துறைத் தலைவர் உதவி ஆணையர் எம். குமாரசன் கூறுகையில் இந்த சம்பவம் தொடர்பில் ஒரு புகார் பதிவு செய்யப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தினார். அதுமட்டுமின்றி, இந்த மோதலுக்கான காரணத்தைத் தீர்மானிக்கத் தொடர்ந்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.



















