தொல்லைகளை நீக்கும் விநாயகர் வழிபாடு

விநாயகப் பெருமானை அனுதினமும் வழிபாடு செய்பவர்களுக்கு அளவில்லா நன்மைகள் உண்டாகும். அதிலும் ஒரு சில குறிப்பிட்ட நட்சத்திர நாளிலோ, திதி நாளிலோ, யோகாதிபதி நாளிலோ நாம் வழிபாடு செய்யும்பொழுது அதற்கேற்ற பலனை நம்மால் பெற முடியும். அந்த வகையில் நம் வாழ்க்கையில் தொல்லைகளை அதிக அளவில் அனுபவிக்கிறோம் என்னும் பட்சத்தில் இன்றைய நாளில் நாம் விநாயகர் பெருமானை வழிபாடு செய்ய வேண்டும்.விநாயகப் பெருமானை வழிபாடு செய்வது என்பது மிகவும் எளிமையான ஒன்றாகவே கருதப்படுகிறது.
பார்க்கும் இடம் எங்கும் வீற்றிருக்கக் கூடிய விநாயகரை மனதார ஒரு முறை நினைத்து வழிபாடு செய்தால் கூட நாம் செய்யக்கூடிய காரியங்களில் நமக்கு வெற்றிகள் உண்டாகும். தடைகள் அனைத்தும் தவிடு பொடி ஆகும். மேலும் அவருக்காக நாம் சமர்ப்பணம் செய்யக்கூடிய பொருட்களும் மிகவும் எளிதில் கிடைக்கக் கூடிய பொருட்களாகவே கருதப்படுகின்றன. எந்த பொருளாக இருந்தாலும் அந்த பொருளை முழுமனதோடு சமர்ப்பணம் செய்யும் பொழுது அந்த பொருளுக்குரிய பலனை விநாயகப் பெருமான் நமக்கு அருள்வார்.
இன்று அக்டோபர் மாதம் எட்டாம் தேதி அஸ்வினி நட்சத்திரமும் மரணயோகமும் சேர்ந்து வரக்கூடிய ஒரு அற்புத நாளாக திகழ்கிறது. இன்றைய நாளில் நாம் விநாயகர் பெருமானை வழிபாடு செய்யும்பொழுது நாம் உடல் ரீதியாக அனுபவிக்க கூடிய அனைத்து விதமான நோய் நொடிகளும், மனரீதியாக அனுபவிக்க கூடிய அனைத்து விதமான கஷ்டங்களும் விலகும் என்றே கூறலாம். இந்த விநாயகர் வழிபாட்டை வீட்டில் செய்ய இயலாது அருகில் இருக்கக்கூடிய ஆலயத்திற்கு சென்று தான் செய்ய வேண்டும்.
விநாயகரே பிரதான தெய்வமாக இருக்கக்கூடிய ஆலயமாக இருந்தாலும் சரி அல்லது வேறு தெய்வங்களின் ஆலயத்தில் இருக்கக்கூடிய விநாயகராக இருந்தாலும் சரி அந்த விநாயகருக்கு காலை 6:00 மணிக்கு மேல் மாலை 6:00 மணிக்குள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இந்த வழிபாட்டை செய்யலாம். இந்த வழிபாட்டை செய்வதற்கு நமக்கு முக்கியமாக தேவைப்படுவது பஞ்சாமிர்தம்.
வாழைப்பழம், பேரிச்சம்பழம், நாட்டுச்சக்கரை, கற்கண்டு, தேன் இவை ஐந்தையும் ஒன்றாக சேர்த்து பஞ்சாமிர்தம் தயார் செய்து அந்த பஞ்சாமிர்தத்தை கொண்டு விநாயகருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். பிறகு தங்களின் பெயரில் தேங்காய் பழம் வெற்றிலை பார்க்க வைத்து அர்ச்சனை செய்ய வேண்டும். விநாயகருக்கு இரண்டு நெய் தீபங்களை ஏற்றி வைத்து தொல்லைகள் முற்றிலும் விலக வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ள வேண்டும்.
இந்த முறையில் அஸ்வினி நட்சத்திரமும் மரண யோகமும் சேர்ந்து வரக்கூடிய நாளில் விநாயகரை வழிபாடு செய்பவர்களுக்கு அனைத்து விதமான தொல்லைகளும் நீங்குமாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here