சிப்பாங்:
காசா நோக்கி மனிதாபிமானப் பணிக்கு சென்ற குளோபல் சுமுத் புளோட்டிலா (GSF) மலேசிய தன்னார்வலர்கள், இஸ்ரேலியப் படைகளால் தடுத்து வைக்கப்பட்ட பின்னர், நேற்றிரவு பாதுகாப்பாக நாடு திரும்பியதை “மலேசியாவின் இராஜதந்திரத்திற்கும் அனைத்துலக ஒற்றுமைக்கும் கிடைத்த வெற்றி” என வெளியுறவுத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் ஹசான் பாராட்டினார்.
“இன்று எங்கள் சகோதரர்கள் பாதுகாப்பாக நாடு திரும்பியதற்காக அல்லாஹ்வுக்கு நன்றி கூறுகிறோம். அத்தோடு துருக்கியே, எகிப்து, ஜோர்டான் போன்ற நட்பு நாடுகளின் தலைமைத்துடன் இணைந்து, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வர் இப்ராஹிம் மிக உயர்ந்த மட்டத்தில் மேற்கொண்ட அயராத இராஜதந்திர முயற்சிகளுக்கு பலன் கிடைத்தது, சர்வதேசத்திற்கு எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்,” என்று அவர் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலைய (KLIA) முனையம் 1இல் தன்னார்வலர்கள் வந்தடைந்ததைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் கூறினார்.




















