கோலாலம்பூர், அக்டோபர் 9 –
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இஸ்ரேலும் ஹமாஸும் தனது 20 அம்ச காஸா சமாதானத் திட்டத்தின் (Gaza peace plan) முதல் கட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக அறிவித்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகால போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான “வரலாற்று மற்றும் முன்னோடியில்லாத” நடவடிக்கை இது என்று அவர் வர்ணித்துள்ளார்.
எகிப்தில் நடந்த பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு எட்டப்பட்ட இந்த ஒப்பந்தத்தின்படி, ஆரம்பக்கட்ட சண்டை நிறுத்தம் (initial ceasefire) நடைமுறைக்கு வரும் நிலையில், ஹமாஸ் மீதமுள்ள அனைத்து பிணைக்கைதிகளையும் (hostages) விடுவிக்கும்.
அதே நேரத்தில், இஸ்ரேல் படைகள் ஒப்புக்கொள்ளப்பட்ட எல்லைக்கோடு வரை பின்னோக்கிச் செல்லும்.
மத்தியஸ்தம் செய்த கத்தார், எகிப்து மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்கு நன்றி தெரிவித்த டிரம்ப், இந்த நடவடிக்கை “பலமான மற்றும் நீடித்த அமைதிக்கு” தொடக்கமாகும் எனக் கூறினார். மேலும், இந்த வார இறுதியில் மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிபிட்டார்.
இந்தத் திட்டத்தின் கீழ், ஹமாஸ் பிணைக்கைதிகளைப் பரிமாறிக்கொள்வதற்கு ஈடாக, உயர் மட்டப் பாலஸ்தீனிய கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்றும், காஸாவிற்குள் மனிதாபிமான உதவிகள் தொடர்ந்து அனுமதிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பல ஆண்டுகால அழிவு, இழப்புகளுக்குப் பிறகு, நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சண்டை நிறுத்தத்திற்காக இரு தரப்பினரும் தயாராகி வருவதால், இந்த அறிவிப்பு களத்தில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.





















