கோலாலம்பூர்:
மலேசிய குடிமக்களை மணந்த வெளிநாட்டு துணைவர், அல்லது துணைவியர் வருடாந்திர சமூக வருகை அனுமதி பாஸ் (Long Term Social Visit Pass) பெற விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் தெரிவித்தார்.
இந்த பாஸ் ஒரு வருட காலத்திற்கு செல்லுபடியாகும். திருமணம் செல்லுபடியாகும் வரை மற்றும் தம்பதியினர் ஒன்றாக வாழும் வரை, அவர்கள் ஆண்டுதோறும் புதுப்பிக்கலாம்.
இருப்பினும், திருமண பிரிவு அல்லது விவாகரத்து ஏற்பட்டால், அந்த வெளிநாட்டு துணைவர் இனி மலேசிய குடிமகனின் சட்டப்பூர்வ மனைவியாக கருதப்படமாட்டார். இதனால், பாஸை புதுப்பிக்கும் தகுதி தானாகவே ரத்து செய்யப்படும் என்று அவர் விளக்கினார்.
அவர் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், மலேசியரை மணந்த வெளிநாட்டு துணைவர், அல்லது துணைவியர் குடிநுழைவு துறையின் அனுமதிக்கு உட்பட்டு மலேசியாவில் சட்டபூர்வமாக வசிக்கவும், வேலை செய்யவும் தகுதி பெறுவார் என்றார்.





















