கோலாலம்பூர்:
தேசிய உயர்கல்வி நிதிக்கழகம் (PTPTN) தனது myPTPTN பயன்பாட்டில் MyDigital ID டிஜிட்டல் அடையாளத்தை ஒருங்கிணைப்பதற்காக, MyDigital ID Sdn Bhd நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம், ஆன்லைன் சேவைகளின் செயல்திறனையும் பயனரின் அனுபவத்தையும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக PTPTN தலைவர் டத்தோஸ்ரீ நோர்லிசா அப்துல் ரஹீம் தெரிவித்துள்ளார்.
“இந்த மாற்றம் பொதுமக்களுக்கு குறிப்பிடத்தக்க நன்மைகளை அளிக்கிறது. அவர்கள் தங்கள் வீடுகள், வளாகங்கள் அல்லது வேறு எங்கிருந்தும் வசதியாக, வேகமாகவும், பாதுகாப்பாகவும் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும்,” என்று அவர் நேற்று மெனாரா PTPTN-ல் நடைபெற்ற ஒப்பந்த கையெழுத்து விழாவில் கூறினார்.
குறித்த ஒப்பந்தத்தில் PTPTN சார்பில் தலைமை நிர்வாகி அமாட் தாசுகி அப்துல் மஜிட், மற்றும் MyDigital ID Sdn Bhd சார்பில் தலைமை நிர்வாக அதிகாரி நிக் ஹிஷாம் நிக் இப்ராஹிம் கையெழுத்திட்டனர்.
நோர்லிசா கூறுகையில், இந்த ஒத்துழைப்பு, தேசிய டிஜிட்டல் அடையாள (NDID) முன்முயற்சி மற்றும் மலேசிய டிஜிட்டல் பொருளாதார ப்ளூபிரிண்ட் (MyDIGITAL) ஆகியவற்றின் கீழ் அரசின் நோக்கங்களுடன் இணங்குவதாகவும், இது நாட்டின் பொது சேவை மாற்றம் மற்றும் டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமாக அமையும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், “PTPTN தனது 2021–2025 மூலோபாயத் திட்டத்தின் ஒரு பகுதியாக, முன்னேற்றமான, வாடிக்கையாளர் நட்பு டிஜிட்டல் அமைப்பாக மாற உறுதிபூண்டுள்ளது. டிஜிட்டல்மயமாக்கல் மூலம் அதிக வேகமாக மற்றும் சிறப்பை அடைவதே எங்கள் இலக்கு,” என அவர் கூறினார்.
அக்டோபர் 15 நிலவரப்படி, 2.8 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் myPTPTN பயன்பாட்டின் மூலம் சேவைகளைப் பயன்படுத்தி வருகின்றனர். இத்தளத்தின் மூலம் பயனர்கள் கடன்களுக்கு விண்ணப்பிக்கவும், கடன் நிலுவைகளைப் பரிசீலிக்கவும், திருப்பிச் செலுத்தல்களை மேற்கொள்ளவும், Simpen SSPN சேமிப்புக் கணக்குகளை எளிதாகவும் பாதுகாப்பாகவும் நிர்வகிக்கவும் முடிகிறது என்று அவர் சொன்னார்.




















