நெகிரி செம்பிலானில் பயங்கர விபத்து: ஓட்டிச்சென்ற கார் தீப்பற்றி எரிந்ததில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்!

கோல பிலா:

ஜாலான் செலாருவில் இருந்து தம்பின் நோக்கிச் சென்ற காரொன்று இன்று பிற்பகல் திடீரென தீப்பிடித்து எரிந்ததில், ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

காவல்துறைத் தகவலின்படி, சம்பவம் மதியம் 2.10 மணியளவில் நடைபெற்றது. காரை இயக்கியவர் சியே வீ காங் (32) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவர் கூறுகையில், தாம் ஒரு சீனக் கோவிலுக்குச் சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, திடீரென காரின் குளிர்சாதனப் பெட்டி செயலிழந்து, அதிலிருந்து உஷ்ணக் காற்று வெளியேறியதை கவனித்ததாக தெரிவித்துள்ளார்.

“நான் உடனே காரை சாலையோரத்தில் நிறுத்தினேன். ஆனால், இயந்திரத்தை மீண்டும் இயக்க முயன்றவுடனேயே, குளிர்சாதனப்பகுதியிலிருந்து புகை எழத் தொடங்கியது. சில வினாடிகளில் தீப்பற்றி பரவியது,”
என்று சியே வீ காங் கூறினார்.

தீ பரவியதும், அவர் விரைவாக காரின் கதவைத் திறந்து வெளியேறியதால், எந்தவித காயமும் ஏற்படவில்லை. ஆனால், டொயோட்டா லெக்சஸ் கார் முற்றிலும் எரிந்தது எனத் தெரிவிக்கப்பட்டது.

நிகழ்விடத்துக்கு உடனடியாக தீயணைப்பு மற்றும் மீட்புப்படை வீரர்கள் சென்று, தீயை முழுமையாக அணைத்தனர்.

இந்த சம்பவத்தின் காரணம் குறித்து தீயணைப்பு துறை மற்றும் காவல்துறை இணைந்து விசாரணை நடத்தி வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here