பிரதமரும் நிதி அமைச்சருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் 2025 அக்டோபர் 10ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவையில் சமர்ப்பித்த 2026 மடானி பட்ஜெட்டை மலேசிய இந்திய வர்த்தகத் தொழிலியல் சங்கங்களின் சம்மேளனம் (மைக்கி) வரவேற்றது.
இது தொழில்முனைவோரை குறிப்பாக நாடு முழுவதும் உள்ள இந்திய தொழில்முனைவோர் மேலும் சிறு வணிக உரிமையாளர்களை பொருளாதார ரீதியில் உயர்த்திடுவதற்கு தொடர்ந்து வலுவான முக்கியத்துவத்தை அளிக்கிறது என்று சம்மேளனத்தின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ என். கோபாலகிருஷ்ணன் குறிப்பிட்டார்.

2026 பட்ஜெட் மலேசிய இந்திய சமூகத்திற்கு குறிப்பாக தொழில்முனைவோருக்கு எந்த வகையில் நன்மை அளிக்கிறது, முன்னேற்றங்களைத் தரவல்லது என்பது குறித்து அவரின் கருத்து கேட்கப்பட்டபோதே இந்த விவரங்களை அவர் தெரிவித்தார்.
மடானி பொருளாதார கட்டமைப்பின் கீழ் உள்ளடக்கிய பொருளாதார பங்கேற்பு, தொழில்முனைவோர் வளர்ச்சி, இலக்கு வைக்கப்பட்ட சமூக மேம்பாட்டிற்கான அரசாங்கத்தின் உண்மையான உறுதிப்பாட்டை இந்த பட்ஜெட் மிகத் தெளிவாகக் காட்டுகிறது என்று அவர் சொன்னார்.
இந்தியத் தொழில்முனைவோருக்கு பங்களிப்பு
இந்தியத் தொழில்முனைவோர், சிறு, நடுத்தர, குறு நிறுவனங்களின் தொழில்துறைகளையும் வணிகங்களையும் ஆதரித்து கைதூக்கி விடுவதற்கு மித்ரா, தெக்குன், அமானா இக்தியார் மலேசியா ஆகியவற்றின் கீழ் 220 மில்லியன் ரிங்கிட்டை இந்த பட்ஜெட்டில் ஒதுக்கியிருப்பதற்கு மைக்கி மடானி அரசாங்கத்தைப் பாராட்டுகிறது.
இது மலேசியாவின் பொருளாதார நீரோட்டத்தில் இந்தியர்களின் பங்களிப்பை மேம்படுத்துவதற்கான ஒரு முற்போக்கான மேலும் மூலோபாயத் திட்டங்களாகும். இந்த நிதி ஒதுக்கீடு இந்தியர்களுக்குச் சொந்தமான நிறுவனங்கள், வணிக நிதி வழிகாட்டுதல், டிஜிட்டல் மாற்றத்திற்கான சிறந்த அணுகலைப் பெறுவதற்கு நேரடியாக உதவுகிறது என்பதை டத்தோஸ்ரீ கோபாலகிருஷ்ணன் சுட்டிக்காட்டினார்.

இதன் வழி சிறந்த பொருளாதார அந்தஸ்துடன் இந்தியத் தொழில்முனைவோர் பெரும் மதிப்புள்ள, தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் திறம்பட போட்டியிட முடியும் என்பதை உறுதி செய்யும். இந்திய சமூகத்திற்கான மொத்த ஒதுக்கீட்டை 600 மில்லியன் ரிங்கிட்டிலிருந்து 1பில்லியன் ரிங்கிட்டாக உயர்த்தியிருப்பதை மைக்கி வெகுவாகப் பாராட்டுகிறது. மடானி அரசாங்கத்தின் இந்த நிதி ஒதுக்கீடு தேசியப் பொருளாதார வளர்ச்சிக்கு இந்திய சமூகத்தின் முக்கியப் பங்களிப்பை அரசாங்கம் அங்கீகரித்திருக்கிறது என்பதையே பிரதிபலிக்கிறது என்றார் அவர்.
டிஜிட்டல், போட்டித்தன்மை வாய்ந்த இந்திய வணிகச் சூழலை உருவாக்குதல்
மலேசியாவின் டிஜிட்டல், புதுமை, பசுமைப் பொருளாதார மாற்றத்தின் ஒரு பகுதியாக இந்தியத் தொழில்முனைவோருக்கு 2026 மடானி பட்ஜெட் புதிய வாய்ப்புகளை வழங்குகிறது.
குறை கடத்திகள், செயற்கை நுண்ணறிவு (ஏஐ), புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, தொழில்நுட்பம் சார்ந்த தொழில்களை ஊக்குவிக்கும் முயற்சிகள் மூலம் மடானி பட்ஜெட் இந்திய சிறு, நடுத்தர, குறு தொழில் நிறுவனங்கள், இளைஞர்கள் உயர் வளர்ச்சித்துறைகளில் திறன்களை மேம்படுத்திக் கொள்வதற்கான பாதைகளையும் உருவாக்குகிறது என்று டத்தோஸ்ரீ கோபாலகிருஷ்ணன் கூறினார்.

பிஎஸ்என், ஷரிக்காட் ஜாமினான் பெம்பியாஹான் பெர்னியாஹான் பெர்ஹாட் (எஸ்ஜேபிபி), மேம்பாட்டு நிதி நிறுவனங்கள் ஆகியவற்றின் கீழ் நிதி, கடன் வசதிகள் உட்பட அரசாங்க ஆதரவுடன் வணிகங்களை புதுமைப்படுத்துதல், டிஜிட்டல் மயமாக்குதல், மேம்படுத்துதல் போன்ற வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ளுமாறு மைக்கி இந்தியத் தொழில் முனைவோரைக் கேட்டுக்கொள்ள விரும்புகிறது எனவும் அவர் சொன்னார்.
2026 பட்ஜெட்டின் கீழ் இந்த ஒதுக்கீடுகள், திட்டங்கள் திறமையாகவும் ஆக்கப்பூர்வமாகவும் செயல்படுத்தப்படுவதையும் தகுதியான இந்தியத் தொழில் முனைவோரைக் களத்தில் சென்றடைவதையும் உறுதி செய்வதாக அரசாங்கத்துடன் நெருக்கமாகப் பணியாற்றுவதற்கான தன்னுடைய உறுதிப்பாட்டையும் கடப்பாட்டையும் மைக்கி மீண்டும் மறு உறுதிப்படுத்துவதாக டத்தோ ஸ்ரீ கோபால கிருஷ்ணன் குறிப்பிட்டார்.
2026 மடானி பட்ஜெட் ஒவ்வொரு மலேசியரையும் அதிகாரப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் உண்மையான அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது. மேலும் இந்திய வணிக சமூகம் மலேசியாவின் தேசிய வளர்ச்சி, முன்னேற்றத்திற்கு தீவிரமாகப் பங்களிக்கத் தயாராக உள்ளது என்றும் அவர் உறுதியளித்தார்.




















