கொச்சி:
சட்டவிரோத உறுப்பு தானத்திற்காக இந்தியர்களை ஈரானுக்கு கடத்தி வந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி மது ஜெயகுமாரை தேசிய புலனாய்வு முகமை (NIA) கைதுசெய்துள்ளது.
கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்த மது ஜெயகுமார், நவம்பர் 8ஆம் தேதி ஈரானிலிருந்து திரும்பியவுடன், கொச்சி விமான நிலையத்தில் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, ஒரு வாரம் NIA காவலில் விசாரணைக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இந்த வழக்கு முதன்முதலில் 2024 மே 18 அன்று வெளிச்சத்திற்கு வந்தது. அப்போது கொச்சி விமான நிலையத்தில் குடிநுழைவு அதிகாரிகள் சந்தேகத்தின்பேரில் ஒரு இளைஞரை தடுத்து விசாரித்த போது, சட்டவிரோத உறுப்பு தானம் மற்றும் ஆட்கடத்தல் தொடர்பான பெரிய சங்கிலி இருப்பது தெரியவந்தது. ஆரம்பத்தில் எர்ணாகுளம் ஊரக காவல் நிலையம் வழக்கு பதிவு செய்த நிலையில், பின்னர் அது NIA-க்கு மாற்றப்பட்டது.
NIA நடத்திய விசாரணையில், பண நெருக்கடியில் இருக்கும் நபர்களை குறிவைத்து, சட்டப்படி உறுப்பு தானம் செய்யலாம் என்று கூறி ஏமாற்றியதோடு, உறுப்பு மாற்று தேவைப்படும் நபர்களையும் அடையாளம் கண்டு, அவர்களுக்காக ஈரானிய மருத்துவமனைகளில் சட்டவிரோத அறுவை சிகிச்சைகளை ஏற்பாடு செய்தது தெரியவந்தது.
இந்தக் குற்றச் செயல்களில் மது ஜெயகுமார் முக்கியக் கதாபாத்திரமாக செயல்பட்டதாக NIA தெரிவித்துள்ளது. இதனையடுத்து, மது உள்ளிட்ட நால்வருக்கு எதிராக NIA ஏற்கனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. 2025 பிப்ரவரியில் இன்டர்போல், மதுவை ‘தேடப்படும் குற்றவாளி’ (Wanted Person) என அறிவித்திருந்தது. அப்போது அவர் ஈரானில் தங்கி இருந்ததாக விசாரணையில் தெரியவந்தது.
அவரின் கைது, இந்த சர்வதேச உறுப்பு கடத்தல் வலையமைப்பை ஒழிப்பதில் முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.





















