கோலாலம்பூர்:
கடந்த மாதம் ஆச்சே, மேற்கு சுமத்ரா மற்றும் வடக்கு சுமத்ராவின் சில பகுதிகளை தாக்கிய கடும் வெள்ளம், நிலச்சரிவுகள் தொடர்பான நிலவரங்களை மலேசிய வெளியுறவு அமைச்சகம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
நவம்பர் 27 முதல் தொடர்பு இழந்த நிலையில் இருந்த 63–64 வயதுக்குட்பட்ட மூன்று மலேசியர்கள் பாதுகாப்பாகக் கண்டுபிடிக்கப்பட்டு, வெள்ளத்தால் தகவல் துண்டிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து வெற்றிகரமாக வெளியேற்றப்பட்டதாக அமைச்சகம் உறுதி செய்துள்ளது.
மீட்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, அவர்கள் இந்தோனேசிய விமானப்படை உதவியுடன் டேகன்கானில் உள்ள ரெம்பேல் விமான நிலையத்திலிருந்து மேடனுக்குக் கொண்டு வரப்பட்டு, கோலானாமு விமான நிலையத்தை பாதுகாப்பாக வந்தடைந்தனர். மேடானில் உள்ள மலேசிய தூதரக அலுவலகம் அவர்களை விரைவில் நாடு திரும்ப ஏற்பாடுகள் செய்து வருகிறது.
அதேவேளை, 64 வயதுடைய ஒரு மலேசியப் பெண்ணின் இருப்பிடம் இன்னும் தெரியாத நிலையில் இருப்பதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. அவரைத் தேடும் நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதுகுறித்து தகவல் அறிந்தவர்கள் உடனடியாக மேடனில் உள்ள மலேசிய துணைத் தூதரகத்தைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், நவம்பர் 27 அன்று மேற்கு சுமத்ராவின் பாடாங் பஞ்சாங்கில் ஏற்பட்ட நிலச்சரிவில் காணாமல் போனதாகக் கூறப்படும் மலேசிய குடிமகன் அஸ்ருல் நிஜாம் அப்ரிட்வ்சன் (30) என்பவரைத் தேடும் தேடல்-மீட்பு பணிகள் ஏழாவது நாளாக தொடர்கின்றன. மேடன் நகரிலுள்ள துணைத் தூதரகம் உள்ளூர் அதிகாரிகளுடன் நெருக்கமாக ஒருங்கிணைத்து குடும்பத்தினருக்கு ஆதரவு வழங்கி வருகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மலேசியர்கள் உள்ளூர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றிச் செயல்படுமாறும், தொடர்பு துண்டிக்கப்பட்ட உறவினர்கள் குறித்து உதவி தேவைப்படின் +62 823-6164-6046 என்ற 24 மணி எண் அல்லது [email protected] மின்னஞ்சல் வழியாக தொடர்பு கொள்ளுமாறும் அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.





















