இந்தோனேசியாவின் தலைநகரில் உள்ள ஏழு மாடிக் கட்டடத்தில் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 9) மதியம் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 22 பேர் மரணமடைந்துள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
தீ அணைக்கப்பட்டுவிட்டாலும், கட்டடத்தின் உள்ளே இருந்தோரை தேடும் மற்றும் மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்று மத்திய ஜகார்த்தா காவல்துறையின் மூத்த கண்காணிப்பாளர் சுசாட்யோ புர்னோமோ கொன்ட்ரோ தெரிவித்தார்.
முதல்மாடியில் மதிய வேளையில் ஏற்பட்ட தீ, வேகமாக மேல்மாடிகளுக்கும் பரவியது. அச்சமயம் சிலர் கட்டடத்தில் மதிய உணவு எடுத்துக்கொண்டிருந்ததாகவும், சிலர் வெளியில் சென்றிருந்ததாகவும் அவர் கூறினார்.
செவ்வாய்க்கிழமை மாலை நிலவரப்படி மரண எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. தீயை முழுமையாக அணைப்பதும், சிக்கியுள்ளவர்களை பாதுகாப்பாக மீட்பதும் தற்போது அதிகாரிகளின் பிரதான கவனம் ஆகும்.
இந்த கட்டிடம், விவசாயத் துறைக்கான ஆய்வுப் பணிகளுக்கு ஆளில்லா வானூர்திகளை (ட்ரோன்) அனுப்பும் ‘டெரா ட்ரோன் இந்தோனேசியா’ நிறுவனத்திற்கு சொந்தமானது. இது ஜப்பானிய ட்ரோன் குழுமம் ஒன்றின் நிதியுதவியுடன் செயல்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘கொம்பாஸ்’ தொலைக்காட்சி வெளியிட்ட காணொளியில், தீயணைப்பு வீரர்கள் கட்டடத்திற்குள் இருந்து மக்களை வெளியேற்றுவதும், மேல்மாடிகளில் இருந்த சிலர் ஏணிப் படிகள் வழியாக கீழிறங்கி தப்பிப்பதும் பதிவாகியுள்ளது.




















