பிள்ளைகளை முதலில் பாதுகாப்போம்

கோலாலம்பூர்:

பி.ஆர். ராஜன்

சிறார்கள் சம்பந்தப்பட்ட சட்டவிரோதப் பிரிவுகளில் குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோக அம்சங்கள் மிக அதிகமான மேலும் ஆபத்தான அளவில் உள்ளன. திருத்தப்பட்ட தோற்றங்கள், பலாத்கார பதிவுகள் போன்றவை தனியார் அல்லது கட்டுப்படுத்தப்பட்ட பிரிவுகளில் அதிகமாகக் பகிரப்படுகின்றன. இவற்றைக் கண்டுபிடித்து நீக்கும் பணி மிகக் கடுமையாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அண்மையில் ஒரு தேசிய அளவிலான கண்டுபிடிப்புகளில் இதுபோன்ற சிறார் பாலியல் துஷ்பிரயோக அம்சங்கள் அநாமதேய கணக்குகள் வழி பகிரப்பட்டு பணம் சம்பாதிக்கப்படுவது தெரிய வந்தது. ரொக்கமில்லா கட்டணங்கள் வழி இந்தக் கொடிய அம்சங்கள் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டிருக்கின்றன.

இந்தத் தோரணையானது மிகவும் ஆபத்தான சுற்றுச்சூழலும் கொடூரமான உள்ளடக்கங்களும் அவை அடையாளம் காணப்பட்டு கட்டுப்படுத்தப்படுவதற்கு முன்னதாகவே பரவலாகப் பகிரப்படுகின்றன.

இந்தப் போக்கை முறியடிப்பதற்கு அரசாங்கம் அனைத்துத் தகவல் ஊடகக் களங்களையும் பயன்படுத்துவதற்குரிய குறைந்தபட்ச வயது 16 என்று அறிமுகம் செய்யும் நடவடிக்கையை முன்னெடுத்திருக்கிறது. மேலும் அதனைக் கட்டுப்படுத்துவதற்கு வயது அடிப்படையில் கண்காணிக்கப்படுவதற்கும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. கண்காணிப்பற்ற இதுபோன்ற செயல்களை முன்கூட்டியே தடுப்பதற்கு இந்த வயது கட்டுப்பாடு வகை செய்யும்.

இந்நிலையில் சிறார் பாதுகாப்பு பல்வேறு கட்டங்களாகப் பாதுகாப்பு அரண்களாக இருப்பதை அரசாங்கத்தின் இந்த ஆகக்கடைசியான முன்னெடுப்புகள் காட்டுகின்றன. சம்பந்தப்பட்ட அனைத்துத் தகவல் ஊடகக் களங்களுக்குள் வயது குறைந்த பிள்ளைகள் செல்வதைப் பாதுகாப்பதற்கு கட்டுப்பாடுகள் நிறைந்த கண்காணிப்பு தேவை என்பதை இந்த நடவடிக்கை உணர்த்துகிறது. அதேசமயம் இவற்றை நடத்துபவர்களுக்கும் மிகப்பெரிய பொறுப்புடைமை இருப்பதையும் இந்த நடவடிக்கை வலியுறுத்துவதாக உள்ளது.

பேராசிரியர் டாக்டர் சிவமுருகன் பாண்டியன்

இவர்கள்தாம் அவற்றை முடக்கும் முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும். அவற்றைக் கண்டுபிடித்து கட்டுப்படுத்தி நீக்கும் அதிகாரமும் அவர்களிடம்தான் உள்ளது. இதனை அவர்கள் மிக நேர்த்தியாகவும் உறுதியாகவும் செய்ய வேண்டிய அவசியம் உள்ளது என்பது அரசாங்கத்தின் இந்த வயதுக் கட்டுப்பாட்டுத் திட்டம் மிகத் தெளிவாகக் காட்டுகிறது.

இந்தப் புதிய வயதுக் கட்டுப்பாடானது 16 வயதுக்குக் கீழ்ப்பட்ட சிறார்கள் மிகவும் ஆபத்தான களங்களில் நுழைவது கட்டுப்படுத்தப்பட்டு அதன் தொடர்பான அம்சங்கள் நீக்கப்படுவதற்குரிய வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்திருக்கிறது.

இணையப் பாதுகாப்புச் சட்டம் குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோக உள்ளடகத்தைக் கட்டுப்படுத்தும் என்று யுஎஸ்எம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் பேராசிரியர் டாக்டர் சிவமுருகன் பாண்டியன் கூறுகிறார். அண்மையில் அமலாக்க அதிகாரிகள் 880,000 பாலியல் அம்சங்கள் அடங்கிய கோப்புகள் இருப்பது குறித்து வெளியிட்ட தகவல்கள் பேரதிர்ச்சியை அளிக்கிறது என்று குறிப்பிட்ட அவர், இது தொடர்பாக 31 பேர் கைது செய்யப்பட்டிருக்கும் நடவடிக்கையும் அரசாங்கம் இவ்விவகாரத்தில் எந்த அளவுக்குக் கடுமையாக உள்ளது என்பதையும் பிரதிபலிக்கிறது என்றார்.

இந்நிலையில் 16 வயதுக்குட்பட்ட சமூக ஊடகப் பயனர்கள் சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுபத்தும் திட்டங்கள் 2025 இணையப் பாதுகாப்பு சட்ட அமலாக்கத்துடன் இணைந்திருப்பதானது மலேசியாவில் குழந்தைகள் அல்லது சிறார்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு எதிரான போராட்டத்தில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தைப் பிரதிபலிப்பதாக உள்ளது என்று அவர் சொன்னார்.

அதேசமயம் இந்தச் சமூக ஊடகங்களை நடத்துகின்ற நிறுவனங்கள் வயது குறைந்த பயனர்களைப் பாதுகாப்பதை செயல்பாட்டு நிபந்தனையாகக் கொண்டிருப்பதையும் இந்தப் புதிய விதிமுறை வலியுறுத்துகிறது. குழந்தைகள், சிறார்கள் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான உள்ளடக்கத்தை பெரும்பாலும் சாதாரண பயனர்கள் பார்க்க முடியாது. ஆனால் மறைக்கப்பட்ட ஊடகங்களின் வழியாக அவை பரவுகின்றன; பகிரப்படுகின்றன.

இதில் மறைமுக இணையக் கும்பல்கள் மொழி அல்லது வடிவத்தில் மாற்றம் செய்யப்பட்ட கோப்பு வடிவங்களைப் பயன்படுத்தி இந்த சட்டவிரோத உள்ளக்கத்தைப் பரப்பி வருகின்றனர் என்று அவர் தெரிவித்தார்.

இந்த நடவடிக்கைகளைக் கண்டறிவது என்பது அவ்வளவு எளிதல்ல. இருப்பினும் அது கண்காணிக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமும் அவசியமும் ஆகும். உரிய நேரத்தில் கண்காணிக்கப்படாவிட்டால் தீங்கை விளைவிக்கும் உள்ளடக்கங்கள் வெகு வேகமாகவும் விரைவாகவும் பரவும் ஆபத்து உள்ளது. இதனால் எந்தவொரு குழந்தையும் சிறாரும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதில் இப்புதிய சட்டம் மிகக் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்கிறது. இவர்கள் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கும்பட்சத்தில் ஆரம்பத்திலேயே அவை கிள்ளி எறியப்பட வேண்டும் என்று டாக்டர் சிவமுருகன் பாண்டியன் குறிப்பிட்டார்.

சம்பந்தப்பட்ட உள்ளடக்கங்கள் கவனிப்பின்றி நீண்ட நேரம் பரவினால் அல்லது பகிரப்பட்டால் சம்பந்தப்பட்ட குழந்தையை உளரீதியாக மிகக்கொடூரமாகப் பாதிக்கச் செய்யும். இதில் சம்பந்தப்பட்ட குழந்தைகள் நலன் நிறுவனங்கள் அல்லது அமைப்புகள் விரைந்து தலையிடவும் பாதிக்கப்பட்டவர்களை மீட்கவும் ஓர் அநாகரிகச் சுரண்டலைத் தடுக்கவும் இந்தப் புதிய சட்டம் அனுமதிக்கிறது. 16 வயதுக்குட்பட்ட பதின்மப் பருவ வயதுப் பிள்ளைகள் வளர்ச்சியின் ஒரு முக்கிக் கட்டத்தில் உள்ளனர். அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

நடப்புச் சூழ்நிலையில் இதுபோன்ற ஆபத்தான இணையத்தள நடவடிக்கைகளால் அவர்கள் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர். அவர்களால் இணையம் மூலம் பரவும் ஆபத்து அதன் நீண்டகாலப் பின்விளைவுகள் ஆகியவற்றை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாத பருவத்தில் உள்ளனர்.

எனவே 16 வயதுக்குட்பட்ட பிள்ளைகள் குறிவைக்கப்படுவது மேலும் துஷ்பிரயோகம் செய்யப்படுவது போன்ற கொடிய செயல்களில் இருந்து காக்கப்படுவதற்கு சமூகமயமாக்கும் டிஜிட்டல் களங்களை உருவாக்குவது மிக அவசியம் என்று தாம் கருதுவதாக பேராசிரியர் டாக்டர் சிவமுருகன் பாண்டியன் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here