நாட்டில் டிங்கி காய்ச்சல் இறப்பு விகிதம் 61.3% குறைவு: சுகாதார அமைச்சர் தகவல்

கோலாலம்பூர்:

நாட்டில் டிங்கி காய்ச்சலால் ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 61.3% குறைந்துள்ளது என்று சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சுல்கிஃப்லி அமாட் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு 111 ஆகப் பதிவான இறப்பு எண்ணிக்கை, இந்த ஆண்டு 43 ஆகக் குறைந்துள்ளது என்றும் அவர் கூறினார்.

டிசம்பர் 6 ஆம் தேதி நிலவரப்படி, நாடு முழுவதும் பதிவான டிங்கி காய்ச்சல் பாதிப்புகளின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்துள்ளது.

2024 ஆம் ஆண்டு முழுவதும் பதிவான 1,18,291 வழக்குகளுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு டெங்கு பாதிப்புகள் 56.5% குறைந்து 51,046 ஆக உள்ளது என்றார் அவர்.

“இந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதிக்குள், டிங்கி காய்ச்சல் பாதிப்புகளின் எண்ணிக்கையை 51,046 என்ற அளவில் பராமரிக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.

நேற்று புத்ராஜெயாவில் வோல்பாச்சியா பூச்சிக்கொல்லி மையத்தைத் திறந்து வைத்த பிறகு பேசிய அவர், டிங்கி காய்ச்சல் பாதிப்புகளைக் கட்டுப்படுத்துவதில் பொது சுகாதாரத் திட்டங்கள், நோய் கட்டுப்பாட்டுப் பிரிவு மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரின் முயற்சிகளுக்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் பிரதமர் துறை கூட்டரசுப் பிரதேச அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜலிஹா முஸ்தபாவும் கலந்து கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here