தமிழ்ப்பள்ளிகள் சீன மொழிப்பள்ளிகளிடம் தோற்றுவிடுமா?

 

பி.ஆர்.ராஜன்

நாடு முழுமையிலும் உள்ள தமிழ்ப்பள்ளிகளில் இந்திய மாணவர்களின்  எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு ஒவ்வோர் ஆண்டும் பல்வேறு முயற்சிகள், திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

பள்ளி மேலாளர் வாரியம், பெற்றோர் -ஆசிரியர் சங்கம், முன்னாள் மாணவர் சங்கம், தமிழ் உணர்வு மிக்க அமைப்புகள் போன்ற தரப்பினர் ஒவ்வோர் ஆண்டும் மாணவர்கள்  எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு பல்வகையான திட்டங்களை வகுத்து செயல்பட்டு வருகின்றனர்.

தமிழ்ப்பள்ளிகளை பொறுத்தவரை கிட்டத்தட்ட 53 விழுக்காட்டுப் பெற்றோர் தங்களது பிள்ளைகளை தமிழ்ப்பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர். 47 விழுக்காட்டு பெற்றோர் சீனம், மலாய்ப் பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர்.

நாடு முழுவதும் தற்போது 530 தமிழ்ப்பள்ளிகள் இருக்கின்ற நிலையில் நூற்றுக்கணக்கான பள்ளிகள் மாணவர் எண்ணிக்கை சரிவை தொடர்ந்து எதிர்நோக்கி வருகின்றன. காலப்போக்கில் இந்த பள்ளிகள் நிலைக்குமா என்ற கேள்வியையும் கவலையையும் ஏற்படுத்தி இருக்கின்றன.

இது ஒருபுறமிருக்க சீனக் கல்வி நிறுவனமான டோங் ஸோங் அண்மையில் ஒரு தரவை வெளியிட்டு இருக்கிறது. இதில் தரப்பட்டுள்ள தகவல்கள் அடிவயிற்றில் புளியைக் கரைப்பது போல் இருக்கிறது. டோங் ஸோங் 1989 ஆம் ஆண்டிலிருந்து 2020 ஆம் ஆண்டு வரையில் சீன  மொழிப்பள்ளிகளில் சீனர் அல்லாத மாணவர் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டுகிறது.

1989 ஆம் ஆண்டில் சீனப்பள்ளிகளில் பதிந்த மொத்த மாணவர்கள் எண்ணிக்கையில் சீனர் அல்லாத மாணவர்கள் எண்ணிக்கை 17,309 அல்லது 3.05 விழுக்காடாக இருந்தது.

1994ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 32,203 அல்லது 5.52 விழுக்காடாக அதிகரித்தது. 1998 ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 52,043 அல்லது 8.66 விழுக்காடு என உயர்வு கண்டது.

2011ஆம் ஆண்டில் சீனப்பள்ளிகளில் சேர்ந்த சீனர் அல்லாதார் மாணவர்கள் எண்ணிக்கை 71,644 அல்லது 12 விழுக்காடு. 2012ஆம் ஆண்டில் 80,024 அல்லது 13.32 விழுக்காடு. சீனர் அல்லாதார் மாணவர்கள் சீனப்பள்ளிகளில் சேர்ந்தனர்.

2014ஆம் ஆண்டில் சீனப்பள்ளிகளில் பதிந்து கொண்ட சீனர் அல்லாத மாணவர்களின் எண்ணிக்கை 87,463 அல்லது 15.31 விழுக்காடு. தொடர்ந்து 2017ஆம்  ஆண்டு அந்த எண்ணிக்கை 94,608 அல்லது 18 விழுக்காடு என உயர்வு கண்டது.

2020ஆம் ஆண்டில் சீன மொழிப்பள்ளிகளில் பதிந்து கொண்ட சீனர் அல்லாத மாணவர்களின் எண்ணிக்கை 101, 011 அல்லது 19.75 விழுக்காடு என மிகப் பெரிய அதிகரிப்பைக் கண்டது.

சீன மொழிப் பள்ளிகளை பொறுத்தவரை சீனர் அல்லாத மாணவர்களின் எண்ணிக்கை கட்டங்கட்டமாக அதிகரித்திருக்கிறது. இந்த எண்ணிக்கையில்   இந்திய மாணவர்களும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் இருக்கின்றனர்.

இந்த மாணவர்கள் அனைவரும் தமிழ்ப்பள்ளிகளில் பதிவு செய்யப்பட்டால் தமிழ்ப்பள்ளிகள் காணாமல்போகும் அபாயத்திலிருந்து காப்பாற்றப்படும்.

மலாய்  மாணவர்கள் எண்ணிக்கை ஒவ்வோர் ஆண்டும் அதிகரித்து வருவது மிகப் பெரிய ஆச்சரியத்தை தந்து வருகிறது. சமயம் , கலாச்சாரம், தீய நோக்கம் கொண்ட பிரச்சாரங்கள் ஆகியவற்றை தீவிரவாத் தரப்பு மேற்கொண்டு வந்தாலும் மிதவாத மலாய்க்காரர்கள் தங்களது பிள்ளைகளை சீன மொழிப்பள்ளிகளில் சேர்ப்பதில் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தமிழ்ப்பள்ளிகளை பொறுத்தவரை 47 விழுக்காட்டு பெற்றோரின் மனப்போக்கு தேசிய மொழிப்பள்ளிகள், சீன மொழிப்பள்ளிகள் ஆகியவற்றின் பக்கம் திரும்பியிருப்பதால் தமிழ்ப்பள்ளிகளின் எதிர்காலம் மிகப் பெரிய சவாலை எதிர்நோக்கியிருக்கிறது என்பது நிதர்சனம்.

நடப்பு சூழ்நிலையில் சீன மொழிப்பள்ளிகளில், மலாய்ப்பள்ளிகளில் சேர்க்கப்படும் இந்திய மாணவர்களை தமிழ்ப்பள்ளிகள் பக்கம் ஈர்ப்பதற்கு ஆக்கப்பூர்வமான, அர்த்தமுள்ள நடவடிக்கைகள் எடுக்கப்படாவிடில் இந்நாட்டில் தமிழ்ப்பள்ளிகள் மிகப் பெரிய சோதனையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை நிராகரிப்பதற்கு இல்லை.

தமிழ்ப்பள்ளிகளையும் தாய்மொழி தமிழையும் காப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here