மின் கோளாறால் பினாங்கு மலை ரயில் சேவை தற்காலிக நிறுத்தம் – விரைவான நடவடிக்கையால் மாலை மீண்டும் சீரானது

பினாங்கு:

பினாங்கு மலையின் புகழ்பெற்ற கேபிள் ரயில் (Funicular Train) சேவை நேற்று மின்கோளாறு காரணமாகத் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் சிறிது நேரம் சிரமத்திற்கு உள்ளாகினர். இருப்பினும், தொழில்நுட்பக் குழுவினரின் விரைவான நடவடிக்கையால் மாலைக்குள் சேவை மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பியது.

நேற்று மதியம் பினாங்கு மலை இரயில் பாதையில் ஏற்பட்ட திடீர் மின் விநியோகத் தடையால் இரயில் இயக்கம் நிறுத்தப்பட்டது. இதனால் மலை உச்சிக்குச் செல்லவிருந்த மற்றும் மலையிலிருந்து கீழே இறங்கவிருந்த சுற்றுலாப் பயணிகள் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

பாதுகாப்பு கருதி அதிகாரிகள் உடனடியாகச் சேவையை நிறுத்திவிட்டு, இரயிலில் இருந்த பயணிகளைப் பாதுகாப்பாக வெளியேற்றினர்.

“மின்னழுத்தக் குறைபாடு அல்லது மின் விநியோகத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாகச் சேவை தற்காலிகமாகப் பாதிக்கப்பட்டது” என்று , பினாங்கு மலை கார்ப்பரேஷன் (PHC) தனது முகநூல் பக்கத்தில் இது குறித்த தகவலைப் பகிர்ந்திருந்தது.

மேலும் “தொழில்நுட்ப வல்லுநர்கள் உடனடியாகச் சம்பவ இடத்திற்குச் சென்று பழுதுபார்க்கும் பணிகளில் ஈடுபட்டனர்.” பழுதுபார்க்கும் பணிகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இன்று மாலை 4.30 மணியளவில் (சுமார்) இரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டது. வரிசையில் காத்திருந்த பயணிகள் மீண்டும் இரயிலில் பயணிக்க அனுமதிக்கப்பட்டனர்.

தற்காலிகத் தடையால் பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்குப் பினாங்கு மலை நிர்வாகம் வருத்தம் தெரிவித்துக் கொண்டது. தற்போது இரயில்கள் வழக்கம் போல் சீராக இயங்கி வருகின்றன.

வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை காலங்களில் பினாங்கு மலைக்குச் செல்பவர்கள், புறப்படுவதற்கு முன் பினாங்கு மலை கார்ப்பரேஷனின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்களைச் சரிபார்த்துவிட்டுச் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here