கிளந்தானில் அதிரடி: சுகாதாரமற்ற முறையில் இயங்கிய 72 உணவகங்கள் மூடல் – 5 லட்சம் ரிங்கிட் அபராதம்!

கோத்தா பாரு:

கிளந்தான் மாநிலத்தில் பொது சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலாகவும், தூய்மையற்ற முறையிலும் செயல்பட்டு வந்த 72 உணவகங்களை 14 நாட்களுக்கு மூடுமாறு சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

இந்த ஆண்டு முழுவதும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள உணவகங்கள், உணவுக் கூடங்கள், தொழிற்சாலைகள் மற்றும் ரமலான் பஜார்கள் என மொத்தம் 6,957 இடங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன என்று, கிளந்தான் மாநில சுகாதாரத் துறை இயக்குனர் டத்தோ டாக்டர் முகமட் அஸ்மான் யாகோப் தெரிவித்தார்.

1983-ஆம் ஆண்டு உணவுச் சட்டத்தின் பிரிவு 11-ன் கீழ், நிர்ணயிக்கப்பட்ட சுகாதாரத் தரத்தைப் பின்பற்றாத 72 உணவகங்கள் உடனடியாக மூடப்பட்டன என்று அவர் சொன்னார்.

மேலும் சுற்றுச்சூழல் தூய்மை மற்றும் உணவுப் பாதுகாப்பு விதிகளை மீறியதற்காக ஆயிரக்கணக்கான நோட்டீஸ்கள் வழங்கப்பட்டுள்ளன, அவற்றில் உணவு சுகாதார விதிகள் 2009: இதன் கீழ் 2,813 நோட்டீஸ்கள் வழங்கப்பட்டன. இதற்கான அபராதத் தொகை 5,19,950 ரிங்கிட் ஆகும். அத்தோடு உணவு விதிகள் 1985 இன் கீழ் 79 நோட்டீஸ்கள் வழங்கப்பட்டு, 46,600 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது என்றார்.

தற்போது கிளந்தானில் பருவமழை மற்றும் வெள்ளக் காலம் தொடங்கிவிட்டதால், உணவுத் தூய்மையைப் பேணுவது மிகவும் அவசியம் எனச் சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

வயிற்றுப்போக்கு, டைபாய்டு (Typhoid) மற்றும் காலரா (Cholera) போன்ற நீர் மற்றும் உணவு மூலம் பரவும் நோய்களைத் தடுப்பதே இந்தத் தீவிர ஆய்வுகளின் முக்கிய நோக்கமாகும்.

உணவு கையாளுபவர்கள் மற்றும் உணவக உரிமையாளர்கள் நிர்ணயிக்கப்பட்ட ஆடைக் கட்டுப்பாடு மற்றும் தூய்மை நெறிமுறைகளைத் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்றும், தவறினால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டாக்டர் அஸ்மான் எச்சரித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here