23 கோடி சொத்தை செல்லப்பிராணிக்கு உயில் எழுதி வைத்த மூதாட்டி

பெய்ஜிங்: சீனாவைச் சேர்ந்த முதியவர் ஒருவர் தனது 23 கோடி மதிப்பிலான சொத்தை பிள்ளைகளுக்குப் பதிலாகச் செல்ல பிராணிகளுக்குத் தர உயில் எழுதி வைத்துள்ளார். இந்தக் காலத்தில் பெற்றோர்- பிள்ளைகள் உறவுச் சிக்கல் நிறைந்ததாகவே இருக்கிறது. சில பிள்ளைகள் தங்கள் பெற்றோரை முறையாகப் பார்த்துக் கொள்வதில்லை. இதனால் பெற்றோர் முதுமையிலும் தனியாக இருக்க வேண்டிய சூழல் இருக்கிறது.

சீனாவில் அப்படி தான் தனிமையில் தவித்த வயதான பெண் ஒருவர் தனது 2.8 மில்லியன் டாலர் சொத்து, அதாவது இந்திய மதிப்பில் 23 கோடி ரூபாய் செல்வத்தைத் தனது பிள்ளைகளுக்குத் தராமல் செல்ல பிராணிகளுக்கு அள்ளி கொடுத்துள்ளார்.

உயில்: ஷாங்காய் பகுதியில் வசிக்கும் லியு என்பவர் தான் இதைச் செய்துள்ளார். தனது குழந்தைகள் தன்னை புறக்கணித்ததாகவும் செல்லப்பிராணிகள் மட்டுமே கடைசி வரை இருந்ததாகவும் அவர் தனது உயிலில் தெரிவித்துள்ளார்.

சீனாவில் உள்ள சட்டப்படி நேரடியாக விலங்குகளுக்கு நம்மால் சொத்தை எழுதி வைக்க முடியாது. இதனால் அந்த சொத்தும் உயிலும் இப்போது உள்ளூர் கால்நடை மருத்துவமனையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. தனது ஒட்டுமொத்த எஸ்டேட்டையும் செல்லப்பிராணிகளுக்குத் தர வேண்டும் என்று லியு தெரிவித்துள்ளார். ஆனால், சீன சட்டப்படி அப்படியும் செய்ய முடியாது..

என்ன காரணம்: வயதான காலத்தில் நோய்வாய்ப்பட்டு இருந்தபோதும், தனது பிள்ளைகள் நேரில் வந்து சந்திக்காததால் அவர் கோபமாக இருந்ததாகவும் இதன் காரணமாகவே சொத்தை இப்படிச் செல்லப்பிராணிகளுக்கு எழுதி வைத்தாகவும் கூறப்படுகிறது. லியுவுக்கு எத்தனை வயதாகிறது என்பது குறித்த தகவல்கள் இல்லை. அவர் வயதான பெண் என்று மட்டும் அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

இது தொடர்பாக அந்நாட்டின் அரசு அதிகாரிகள் கூறுகையில், “இந்த சிக்கலைத் தீர்க்க மாற்று வழிகள் உள்ளன.. லியுவின் தற்போதைய விருப்பம் செல்லப்பிராணிகள் நல்ல பராமரிக்க வேண்டும் என்பதே.. அதை உறுதி செய்வதற்காக அவர் ஒரு கால்நடை மருத்துவரை மேற்பார்வையாளராக நியமிக்கலாம்.. அதேநேரம் இத்தனை பெரிய தொகையைக் கால்நடை மருத்துவமனையின் கைகளில் கொடுப்பதில் ஆபத்தும் இருக்கிறது” என்றார்.

விவாதம்: லியுவுக்கு இருக்கமாக இருக்கும் ஒரு சிலர் கூறுகையில், “நாங்கள் அப்போதே லியுவிடம் சொன்னோம், ஒரு முறைக்கு இரண்டு முறை யோசியுங்கள் என்று.. இருப்பினும் அவர் தனது நிலைப்பாட்டில் தெளிவாக இருக்கிறது. தனது பிள்ளைகள் தன்னை பார்க்க வந்தால் உயிலை மாற்றிக்கொள்ள அவர் சம்மதமும் தெரிவித்துள்ளார்” என்று அவர் தெரிவித்துள்ளார். சீனாவின் குடும்ப அமைப்பு எந்தளவுக்குச் சிக்கலாக இருக்கிறது என்பதையே இது காட்டுவதாக இருக்கிறது.

இந்த சம்பவம் இணையத்தில் பல விதமான விவாதத்தைக் கிளப்பியுள்ளது.. தனது குழந்தைகளில் நடவடிக்கைகளால் ஒருவர் எந்தளவுக்கு ஏமாற்றமடைந்திருந்தால் இப்படிச் செய்திருப்பார் என்று பலரும் சாடி வருகின்றனர். மேலும், இன்னும் சிலர் வரும் காலத்தில் தங்கள் பிள்ளைகள் இதுபோல நடந்து கொண்டால்.. இதை முடிவை எடுப்போம் என்று கூறி வருகின்றனர்.

அதேநேரம் பெரும் செல்வந்தர்கள் தங்கள் செல்லப்பிராணிகளுக்குச் சொத்தை எழுதி வைப்பது இது முதல்முறை இல்லை.. கடந்த 2020 ஆம் ஆண்டில், அமெரிக்கத் தொழிலதிபர் ஒருவர் 5 மில்லியன் டாலர்களை (சுமார் 5 கோடி ரூபாய்) சொத்தை தனது எட்டு வயது நாய் லுலுவுக்கு விட்டுச் சென்றார். அதேபோல கடந்த 2010இல் உயிரிழந்த பிரிட்டிஷ் ஃபேஷன் டிசைனர் அலெக்சாண்டர் மெக்வீன் என்பவர் தனது சொத்தில் பெருந்தொகையைத் தனது நாய்களுக்கு விட்டுச் சென்றது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here