இந்தோனேசியாவிலுள்ள ஒரு முதியோர் இல்லத்தில் பயங்கர தீ விபத்து – 16 முதியவர்கள் உடல் கருகி பலி!

மேடான்:

ந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா மாகாணத்தில் உள்ள ஒரு தனியார் முதியோர் இல்லத்தில் நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 16 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்தோனேசிய ஊடகங்களின் தகவல்படி: தீ விபத்து ஏற்பட்ட போது முதியோர் இல்லத்தில் இருந்த முதியவர்கள் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர்.

கட்டிடத்தின் ஒரு பகுதியில் தொடங்கிய தீ, மிக வேகமாக மற்ற பகுதிகளுக்கும் பரவியது.

கட்டிடத்தின் ஜன்னல்கள் மற்றும் கதவுகள் இரும்பு கம்பிகளால் (Grilles) பாதுகாப்பிற்காக மூடப்பட்டிருந்ததால், தீப்பிடித்த போது முதியவர்களால் உடனடியாக வெளியேற முடியாமல் போனது மீட்புப் பணிகளில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.

16 பேர் உயிரிழந்ததாகவும், அவர்களில் பெரும்பாலானோர் நடமாட முடியாத நிலையில் இருந்த முதியவர்கள் என்று கூறப்படுகிறது. அவர்கள் புகையினால் மூச்சுத்திணறல் ஏற்பட்டும், உடல் கருகியும் உயிரிழந்தனர்.

தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். காயமடைந்த மற்ற முதியவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

தீ விபத்துக்கான ஆரம்பக்கட்ட காரணம் மின் கசிவு (Short circuit) ஆக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும், முதியோர் இல்லத்தில் போதுமான பாதுகாப்பு வசதிகள் மற்றும் தீயணைப்பு உபகரணங்கள் இருந்தனவா என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தோனேசியாவில் போதிய பாதுகாப்பு தரநிலைகள் இல்லாத கட்டிடங்களில் இதுபோன்ற தீ விபத்துகள் அடிக்கடி நிகழ்வது தொடர்கதையாகி வருவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here