கோலாலம்பூர்:
நாட்டின் அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்காக மக்களிடையே ஒற்றுமை மற்றும் பரஸ்பர மரியாதையைத் தொடர்ந்து வலுப்படுத்துமாறு மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அவர்கள், அழைப்பு விடுத்துள்ளார்.
தமது அதிகாரப்பூர்வ முகநூல் (Facebook) பக்கத்தில் வெளியிட்டுள்ள புத்தாண்டு செய்தியில், “மதம் அல்லது இனம் கடந்து மக்களிடையே நிலவும் ஒற்றுமை மற்றும் சகிப்புத்தன்மையே நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு மிக முக்கியத் தூண்களாகும்” என்று தெரிவித்தார்.
மேலும் பேரரசர் சுல்தான் இப்ராஹிம் மற்றும் பேரரசியார் ராஜா ஜரித் சோஃபியா ஆகியோர் அனைத்து மலேசியர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளுகின்றனர்.
மலர்ந்துள்ள 2026-ஆம் ஆண்டு மலேசியாவுக்குத் தொடர் முன்னேற்றத்தையும், வளத்தையும், நல்வாழ்வையும் கொண்டு வர வேண்டும் என்று அவர்கள் இறைவனைப் பிரார்த்திப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
“மலேசியா எப்போதும் இறைவனின் பாதுகாப்பில் இருக்க வேண்டும் என்றும், நிலையான அமைதி, முன்னேற்றம் மற்றும் செழிப்புடன் நாடு ஆசீர்வதிக்கப்பட வேண்டும்” என்றும் மாமன்னர் தம்பதியினர் தங்களது வாழ்த்துச் செய்தியில் வலியுறுத்தியுள்ளனர்.
புத்தாண்டு கொண்டாட்டங்கள் ஒருபுறம் இருந்தாலும், நாட்டின் பன்முகத்தன்மையைப் போற்றிப் பாதுகாப்பதே நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் கடமை என்பதையும் இந்தச் செய்தி நினைவூட்டுகிறது.





















