கோலாலம்பூர்:
சபாவின் பொங்கவான் (Bongawan) பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையத்தின் பெண்கள் கழிப்பறையில் கைவிடப்பட்ட நிலையில் பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று மீட்கப்பட்டது. இந்தச் சம்பவத்தில் குழந்தையைக் கண்டெடுத்ததாகப் புகார் அளித்த 21 வயதுப் பெண்ணையே போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.
நேற்று முன்தினம் (ஜனவரி 1, 2026) அதிகாலை சுமார் 1.20 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உள்ளூரைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒருவர், பெட்ரோல் நிலையக் கழிப்பறையில் ஒரு குழந்தை அழுதுகொண்டிருப்பதாக போலீசாருக்குத் தகவல் அளித்தார். தகவலறிந்து வந்த போலீசார் குழந்தையை மீட்டு, உடனடி சிகிச்சைக்காக பாப்பார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் என்று, பாப்பார் மாவட்டப் போலீஸ் தலைவர், சூப்பிரிண்டெண்டெண்ட் ஹெரியான் முகமட் தாஹிர் கூறினார்.
ஆரம்பத்தில் அக்குழந்தையைத் தான் கண்டெடுத்ததாக அந்தப் பெண் கூறினார். ஆனால், போலீசாரின் தொடர் விசாரணையில் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை அவர் அளித்துள்ளார்.
பெட்ரோல் நிலையத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா (CCTV) காட்சிகளை ஆய்வு செய்தபோது, அந்தப் பெண்ணிற்கும் அக்குழந்தைக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. புகாரளித்த அந்தப் பெண்ணே குழந்தையின் தாயாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
குழந்தை தற்போது மருத்துவமனையில் சீரான உடல்நலத்துடன் உள்ளது. அந்தப் பெண் மேலதிக விசாரணைக்காகக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
“குழந்தையின் நலன் மற்றும் பாதுகாப்பிற்கே நாங்கள் முன்னுரிமை அளிக்கிறோம். இந்த விவகாரம் குறித்து மிகத் தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது,” என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





















