அன்வாருடன் ரகசியப் பேச்சுவார்த்தை இல்லை: பாஸ் கட்சி திட்டவட்டம்!

கோலாலம்பூர், ஜனவரி 6:

பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் உட்பூசல் நிலவுவதாகக் கூறப்படும் சூழலில், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமுடன் பாஸ் கட்சி எந்தவொரு சிறப்புப் பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை என அக்கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் டத்தோ அகமட் ஹம்சாட் ஹாஷிம் மறுத்துள்ளார்.

கட்சியின் அதிகாரப்பூர்வ அல்லது அதிகாரப்பூர்வமற்ற எந்தவொரு கூட்டத்திலும் இத்தகைய விவகாரம் குறித்து விவாதிக்கப்படவில்லை என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

கெடா மற்றும் திரெங்கானு மாநில முதல்வர்கள் பிரதமரைச் சந்தித்துப் பேசியது முற்றிலும் மாநில நிர்வாகம் தொடர்பான ஒரு வழக்கமான நடைமுறை மட்டுமே என்றும், அதனை அரசியல் பேச்சுவார்த்தையாகத் தவறாகக் கருதக் கூடாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் நெருக்கடி காரணமாகவே பாஸ் தலைவர்கள் அன்வாரைச் சந்தித்ததாக அம்னோ இளைஞர் அணித் தரப்பிலிருந்து முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் வெறும் ஆதாரமற்ற ஊகங்கள் மட்டுமே என அவர் சாடியுள்ளார்.

மலாய்-முஸ்லிம் பெரும்பான்மை ஆதரவின் அடிப்படையில் ஒரு நிலையான அரசியல் கூட்டணியாக பெரிக்காத்தான் நேஷனலை வலுப்படுத்துவதிலேயே பாஸ் கட்சி தற்போது கவனம் செலுத்தி வருகிறது.

அதே வேளையில், சமூக ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை மேம்படுத்தும் நோக்கில் மிதவாதப் போக்குடைய மலாய் அல்லாத தரப்பினருடனும் இணைந்து செயல்படத் தங்கள் கட்சி எப்போதும் தயாராக இருப்பதாகவும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here