கோலாலம்பூர், ஜனவரி 6:
பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் மேலும் 10 நிறுவனங்களின் பெயர்களைப் புக்கிட் அமான் வணிகக் குற்றப் புலனாய்வுத் துறை (JSJK) தனது ‘செமாக்மியூல்’ (Semakmule) தரவுத்தளத்தில் சேர்த்துள்ளது.
கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி வரையிலான ஒரு மாத காலத்தில், இந்த நிறுவனங்களுக்கு எதிராகப் பொதுமக்கள் அளித்த ஏராளமான புகார்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிவிசி குரோ ஸ்டார், சிவிசி குரூப், ஜேஎம்சி எம் டிரேடிங் வென்ச்சர், ஜேஎம்சி ஆசியா டாப் சொல்யூஷன், கேஜிஐ எச்.கே, கிரீன்வேல் டிரேடிங், டைட்டன் யூனியன் டிரேடிங், பிரைட் குளோபல், ஆர்எக்ஸ்எம் ஐகுளோபல் சொல்யூஷன் மற்றும் அபெக் எக்ஸ்பிரஸ் சர்வீசஸ் ஆகியவையே அந்த நிறுவனங்கள் என வணிகக் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ ருஸ்டி முகமட் இசா இன்று அறிவித்தார்.
மூன்றாம் தரப்பினருக்காக எஸ்எஸ்எம்-இல் (SSM) நிறுவனங்களைப் பதிவு செய்வது அல்லது வங்கிச் சேமிப்புக் கணக்குகளைத் தொடங்குவது போன்ற எளிதான வேலை வாய்ப்புகளைக் கண்டு ஏமாற வேண்டாம் என்று பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இத்தகைய கணக்குகள் பெரும்பாலும் மோசடி கும்பல்களால் Mule Accountகளாக பயன்படுத்தப்படுகின்றன என்று டத்தோ ருஸ்டி எச்சரித்தார்.
எவ்வித நிதிப் பரிமாற்றங்களைச் செய்வதற்கு முன்னரும், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பெயர்கள் அல்லது வங்கி கணக்கு எண்களைச் ‘Semakmule’ அகப்பக்கம் அல்லது செயலி வழியாகச் சரிபார்க்க வேண்டியது அவசியமாகும்.
ஒருவேளை தேடப்படும் கணக்கு அல்லது நிறுவனம் குறித்து எச்சரிக்கை தகவல் காட்டப்பட்டால், அது மோசடி நடவடிக்கைகளுடன் தொடர்புடையது என்பதைப் புரிந்துகொண்டு பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும்.
உங்களது மற்றும் உங்களின் குடும்பத்தினரின் கடின உழைப்பில் சேர்த்த சேமிப்பைப் பாதுகாத்துக் கொள்ள இத்தகைய சந்தேகத்திற்குரிய நிறுவனங்களைத் தவிர்க்குமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வரும் வேளையில், தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதே சிறந்த வழி என்று அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.





















