மலேசியாவில் செம்புத் திருட்டு சம்பவங்கள் அதிகரிப்பு: பொதுச் சொத்துகளுக்குப் பெரும் பாதிப்பு

கோலாலம்பூர்:

மலேசியாவில் செம்பு உலோகத்திற்கு நிலவும் அதிக தேவையால், மின்சாரக் கம்பிகள் மற்றும் தொலைத்தொடர்பு கேபிள்கள் (Cables) குறிவைக்கப்படுவது ஒரு தேசியப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

அண்மையில் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, ரயில்வே தண்டவாளங்கள் மற்றும் மின்சார அமைப்புகளில் உள்ள கேபிள்கள் திருடப்பட்டதால், கடந்த ஓராண்டில் மட்டும் சுமார் 1,300 மணி நேர ரயில் தாமதங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக கிள்ளான் பள்ளத்தாக்கு (Klang Valley) பகுதிகளில் உள்ள பயணிகள் இந்த பாதிப்பை அதிகம் உணர்ந்துள்ளனர்.

மலேசியாவின் மிகப்பெரிய உள்கட்டமைப்பு திட்டமான கிழக்குக்கரை ரயில் இணைப்பு (ECRL) கட்டுமானத் தளங்களில் தொடர்ந்து கேபிள்கள் திருடப்பட்டு வருகின்றன. இது 2026-ஆம் ஆண்டு முடிக்கப்பட வேண்டிய திட்டத்தின் காலக்கெடுவைப் பாதிக்கும் என Malaysia Rail Link (MRL) கவலை தெரிவித்துள்ளது. இது குறித்து கடுமையான நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு (PDRM) உத்தரவிடப்பட்டுள்ளது.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC), சுங்கத் துறை மற்றும் உள்நாட்டு வருமான வரி வாரியம் இணைந்து நடத்திய ‘ஆப்ஸ் மெட்டல்’ (Ops Metal) அதிரடி சோதனைகளில், சுமார் 950 மில்லியன் ரிங்கிட் வரி ஏய்ப்பு செய்த சட்டவிரோத உலோக ஏற்றுமதி கும்பல்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவை பெரும்பாலும் உரிமம் பெறாத பழைய இரும்பு விற்பனை நிலையங்கள் மூலம் செம்பு மற்றும் பிற உலோகங்களை வெளிநாடுகளுக்குக் கடத்தி வந்துள்ளன.

இந்நிலையில், மலேசிய இந்திய உலோக வர்த்தகர்கள் சங்கத்தின் (MIMTA) தலைவர் ஆறுமுகம், இந்த பிரச்ச்சினைக்கு தீர்வு காண அரசு பல நடைமுறைகளை அமல்படுத்த வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளனர். அதில் செம்பு விற்பனை செய்பவர்களின் விவரங்களை டிஜிட்டல் முறையில் பதிவு செய்ய வேண்டும் என்றும், பழைய உலோகம் வாங்குவதற்கு ரொக்கப் பணத்தைப் பயன்படுத்துவதைத் தடை செய்து, வங்கிப் பரிமாற்றம் மூலமே பணம் செலுத்த வேண்டும் என்றும், இது திருடப்பட்ட பொருட்களை விற்பதைத் தடுக்கும் என்றும் கூறினார்.

மேலும் உலோகம் சேகரிப்பவர்களுக்குக் கட்டாய அடையாள அட்டைகளை வழங்க வேண்டும் என்றும் சொன்னார்.

சாலையோர மின் பெட்டிகள் அல்லது தொலைத்தொடர்பு கோபுரங்களுக்கு அருகே சந்தேகத்திற்கிடமான நபர்கள் வேலை செய்வது போலத் தெரிந்தால், உடனடியாக 999 என்ற எண்ணிற்குத் தகவல் தெரிவிக்குமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here