கோலாலம்பூர், ஜனவரி 6:
மலேசிய ராணுவ தரைப்படை கொள்முதல் திட்டங்களில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 26 நிறுவனங்கள் மீது மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (SPRM) விசாரணையைத் தொடங்கியுள்ளது.
இந்த நிறுவனங்களின் உரிமையாளர்களும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதோடு, தேவைப்பட்டால் அவர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்படலாம் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது.
நேற்று காலை 11 மணியளவில் கிள்ளான் பள்ளத்தாக்கு, பேராக் மற்றும் பினாங்கு ஆகிய இடங்களில் ஒரே நேரத்தில் இந்த அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டன.
முன்னதாக, கடந்த டிசம்பர் 23-ஆம் தேதி பாதுகாப்பு அமைச்சிற்குச் சென்ற அதிகாரிகள், தரைப்படையின் பொறுப்பு மையத்தின் கீழ் உள்ள டெண்டர் திட்டங்கள் தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்திருந்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே மூன்று நபர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ள நிலையில், 2009-ஆம் ஆண்டு ஊழல் தடுப்பு ஆணையச் சட்டத்தின் பிரிவு 17 மற்றும் 23-இன் கீழ் வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாக MACC தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி உறுதிப்படுத்தியுள்ளார்.
சமூக ஆர்வலர் பத்ருல் ஹிஷாம் ஷஹாரின் அல்லது செகுபார்ட் (Chegubard) முன்வைத்த புகாரின் அடிப்படையில் இந்த விசாரணை தீவிரமடைந்துள்ளது.
ஒரு மூத்த ராணுவ அதிகாரி மற்றும் அவரது குடும்பத்தினரின் வங்கிக் கணக்குகளில் ஒவ்வொரு மாதமும் பல்லாயிரக்கணக்கான ரிங்கிட் டெபாசிட் செய்யப்பட்டதற்கான நிதி தடயவியல் ஆதாரங்கள் தமக்குக் கிடைத்துள்ளதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த ஊழல் புகார் ராணுவ கொள்முதல் நிர்வாகத்தில் நிலவும் பலவீனங்களைச் சுட்டிக்காட்டியுள்ளதோடு, பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே தான், பாதுகாப்புத் துறையின் நிதி மேலாண்மையில் வெளிப்படைத்தன்மையையும் நேர்மையையும் உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
இந்த விசாரணையின் முடிவில் முக்கியத் தகவல்கள் வெளிவரும் என்றும், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் ஊழல் தடுப்பு ஆணையம் உறுதியளித்துள்ளது.


















