மலாக்கா:
மலாக்காவில் உள்ள ஒரு ஹோட்டல், தம்மை ‘ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு உகந்தது ‘ (Gay-friendly) என அடையாளப்படுத்திக் கொண்டது தொடர்பான புகார்களைத் தொடர்ந்து, மலாக்கா இஸ்லாமிய சமயத் துறை (JAIM) விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் குறிப்பிட்ட ஒரு ஹோட்டலின் வசதிகள் குறித்த பட்டியலில் ‘Gay-friendly’ என்ற லேபிள் இடம்பெற்றிருந்தது வைரலானது.
இது குறித்து மலாக்கா மாநிலக் கல்வி, உயர்கல்வி மற்றும் சமய விவகாரக் குழுவின் தலைவர் டத்தோ ரஹ்மத் மரிமான் கூறுகையில், “இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்துமாறு நான் JAIM-க்கு உத்தரவிட்டுள்ளேன்,” எனத் தெரிவித்தார்.
பிரபல சுயாதீன போதகரான பிர்தௌஸ் வோங் வாய் ஹங், தனது சமூக வலைதளப் பக்கத்தில் இது குறித்துக் காரசாரமாகப் பதிவிட்டிருந்தார். அவரது பதிவில்: “மலேசியாவில் செல்லப் பிராணிகளுக்கான (Pet-friendly) மால்கள், குடும்ப நட்பு (Family-friendly) இடங்கள் இருப்பது போல, இப்போது மலாக்காவில் ‘ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு உகந்த’ ஹோட்டலும் வந்துள்ளது.
இது போன்ற பிராண்டிங் மிகவும் ஆக்கப்பூர்வமாக உள்ளது. ‘முஸ்லிம்களுக்கு உகந்தது ‘ என்ற லேபிளே ஒரு வியாபாரமாக மாற்றப்படும்போது, ‘ஓரினச்சேர்க்கையாளர் களுக்கு உகந்தது’ என்ற லேபிளைப் பற்றிச் சொல்லவா வேண்டும்?” என்று அவர் விமர்சித்திருந்தார்.
மலேசியாவின் சட்டங்கள் மற்றும் கலாச்சார விழுமியங்களுக்கு முரணான வகையில் இத்தகைய லேபிள்கள் பயன்படுத்தப்படுவது குறித்து அதிகாரிகள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர். இந்த விசாரணைக்குப் பிறகு சம்பந்தப்பட்ட ஹோட்டல் மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்துத் தீர்மானிக்கப்படும் என்று அவர் மேலும் கூறினார்.





















