புக்கிட் ரம்பாய் தொழிற்சாலையில் தீ விபத்து: ஒருவர் உயிரிழப்பு, ஒருவர் காயம்

( ரெ.மாலினி)

மலாக்கா:

தஞ்சோங் மின்யாக், புக்கிட் ரம்பாய் தொழில்துறைப் பகுதியில் அமைந்துள்ள Malacca Sdn Bhd தொழிற்சாலையில் இன்று மதியம் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு ஆண் தொழிலாளி உயிரிழந்ததுடன், மற்றொரு ஆண் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மதியம் சுமார் 1.23 மணியளவில், வாயுவை திரவமாக மாற்ற பயன்படும் Cooling Pool Tank பகுதியில் திடீரென வெடிப்பு மற்றும் தீப்பற்றுதல் ஏற்பட்டதாக தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர், கடுமையாக தீக்காயம் அடைந்த முதல் பாதிக்கப்பட்டவரை மீட்க முயற்சித்தனர். எனினும், ஆம்புலன்ஸ் வருகையின் பின்னர் அவர் இறந்ததாக உறுதி செய்யப்பட்டது. இரண்டாவது பாதிக்கப்பட்டவர் மலாக்கா பொது மருத்துவமனையின் சிவப்பு மண்டலத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

ஆரம்ப விசாரணையில், சம்பவம் நடந்த தொட்டியில் வாயு கசிவு மற்றும் வெல்டிங் பணி நடைபெற்று வந்திருக்கலாம் என தெரிய வந்துள்ளது. இருப்பினும், விபத்திற்கான துல்லியமான காரணம் குறித்து பல கோணங்களில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கு தற்போது “திடீர் மரணம்” என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் மற்றும் ஊடகங்கள், உறுதிப்படுத்தப்படாத தகவல்களை பரப்புவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். விசாரணை தொடர்பான மேலதிக தகவல்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here