கோலாலம்பூர்:
அம்னோ பொதுச்சபையின் நிறைவுரையில் பேசிய அக்கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ அமாட் ஜாஹிட் ஹமிடி, பிரதமர் அன்வார் இப்ராகிமுக்கு ஒரு முக்கியமான நினைவூட்டலை வழங்கினார்.
ஜாஹிட் ஹமிடி தனது உரையில் தமிழ்ச் சொல்லான ‘கறிவேப்பிலை’ என்பதைப் பயன்படுத்தி ஒரு சுவாரஸ்யமான உதாரணத்தைக் கூறினார்:
“குழம்பு சமைக்கும்போது மணம் தருவதற்காகக் கருவேப்பிலையைப் போடுகிறோம். ஆனால் சாப்பிடும்போது அதைத் தூக்கி ஓரமாக வைத்து விடுகிறோம். எங்களை அப்படி நடத்த வேண்டாம். நீங்கள் எங்களுடன் உண்மையான நட்புறவை வளர்க்க விரும்பினால், எங்களை நம்புங்கள். அவ்வாறு நம்பினால், நாங்கள் ஒருபோதும் துரோகம் செய்ய மாட்டோம்.” என்று சொன்னார்.
அரசாங்க நிறுவனங்கள் (GLC) மற்றும் அரசாங்க முதலீட்டு நிறுவனங்களின் (GLIC) தலைவர் மற்றும் வாரிய உறுப்பினர்களை நியமிக்கும்போது, வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தை அம்னோவிடம் வழங்க வேண்டும்.
“நீங்கள் அமாட் ஜாஹித்தை நம்பாவிட்டால், வேறு யாரை நம்பப் போகிறீர்கள்? எங்களிடம் 30 இடங்கள் மட்டுமே இருந்தாலும், பக்காத்தான் ஹரப்பானின் 82 இடங்களுடன் நாங்கள் ஆதரவு அளித்ததால்தான் இன்று நீங்கள் பிரதமராக இருக்க முடிகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்,” என்று அவர் சுட்டிக்காட்டினார்.
வேட்பாளர்களைப் பரிந்துரைப்பதில் தங்களுக்குத் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல் ஏதும் இல்லை என்றும், தங்களை நம்பி அந்தப் பொறுப்பை வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும் கூட்டணிக்குள் சந்தேகம் இருக்கக்கூடாது என்றும், உண்மையான நண்பர்களாகச் செயல்பட்டால் இன்ஷா அல்லாஹ் (இறைவன் நாடினால்) இந்த நட்பு நிலைத்திருக்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.




















