புத்ரா ஹைட்ஸ் தீ விபத்து: 67 குடும்பங்களுக்கு வாடகை உதவி நீட்டிப்பு – சிலாங்கூர் அரசு அறிவிப்பு!

ஷா ஆலம்:

சுபாங் ஜெயா, புத்ரா ஹைட்ஸ் பகுதியில் ஏற்பட்ட எரிவாயுக் குழாய் தீ விபத்தினால் வீடுகளை இழந்த 67 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வரும் தற்காலிக வாடகை உதவியை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்க சிலாங்கூர் மாநில அரசு முடிவு செய்துள்ளது.

கடந்த 2025-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற இந்த கோர விபத்தில் பலரது வீடுகள் முற்றிலும் சேதமடைந்தன. இதற்காக வழங்கப்பட்டு வரும் தற்காலிக வாடகை உதவியின் நான்காம் கட்டமாக, ஜனவரி 2026 முதல் மார்ச் 2026 வரையிலான காலத்திற்கு இந்த நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

பெட்டாலிங் மாவட்ட மற்றும் நில அலுவலகம் மேற்கொண்ட கள ஆய்வுகள் மற்றும் மதிப்பீடுகளின் அடிப்படையில், கடந்த ஜனவரி 21 அன்று நடைபெற்ற சிலாங்கூர் மாநில நிர்வாகக் குழுக் கூட்டத்தில் இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது.

இது குறித்து மாநில வீட்டுவசதி மற்றும் கலாசாரக் குழுவின் தலைவர் போர்ஹான் அமன் ஷா கூறுகையில், “மூன்றாம் கட்டத்தில் உதவி பெற்ற 123 குடும்பங்களில், தற்போது 67 குடும்பங்களுக்கு மட்டுமே இந்த நீட்டிப்பு அவசியமாகிறது. இதில் 65 குடும்பங்களின் வீடுகளில் இன்னும் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. எஞ்சிய 2 குடும்பங்களின் வீடுகள் நில உரிமை ஆவணச் சிக்கல்களால் இன்னும் கட்டப்படாமல் உள்ளன,” எனத் தெரிவித்தார்.

அதே வேளையில், வீடுகள் முழுமையாகச் சீரமைக்கப்பட்டு மீண்டும் குடியேறத் தகுதியான நிலையில் உள்ள 56 குடும்பங்களுக்கான வாடகை உதவி நிறுத்தப்பட்டுள்ளது. வீடுகள் பாதுகாப்பாக இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்த பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்கள் பாதுகாப்பான சூழலில் மீண்டும் குடியேறும் வரை, அவர்களின் நலனில் மாநில அரசு தொடர்ந்து அக்கறை காட்டும் என்றும் அவர் உறுதி அளித்தார்.

கடந்த 2025 ஏப்ரல் 1-ஆம் தேதி புத்ரா ஹைட்ஸில் உள்ள பெட்ரோனாஸ் எரிவாயுக் குழாயில் ஏற்பட்ட வெடிப்பு மற்றும் தீ விபத்தில் 81 வீடுகள் முற்றிலும் இடிந்து விழுந்தன. 1,000 டிகிரி செல்சியஸிற்கும் அதிகமான வெப்பத்தில் எறிந்த இந்த தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் சுமார் 8 மணி நேரம் போராடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here