கோத்தா கினபாலு:
சபா மாநிலத்தின் கினாபதங்கான் நாடாளுமன்றம் மற்றும் லாமாக் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மறைந்த முன்னாள் எம்பி டத்தோ ஶ்ரீ புங் மொக்தார் ராடினின் வெற்றிடத்தை நிரப்பப்போவது யார் என்பதைத் தீர்மானிக்க மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
இந்த தொகுதியில் மொத்தம் 48,722 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் உள்ளனர்.
இந்த நிலையில், 36 வாக்குச் சாவடி மையங்களில் காலை 7.30 மணி முதல் வாக்குப் பதிவு தொடங்கி நடைபெறுகிறது.
இன்று காலை 11 மணி நிலவரப்படி, கினாபதங்கானில் 33% மற்றும் லாமாக்கில் 30% வாக்குகள் பதிவாகியுள்ளன
கினாபதங்கானில் மும்முனைப் போட்டி நிலைகிறது. தேசிய முன்னணியின் (BN) நாயிம் குர்னியாவான், வாரிசான் கட்சியின் டத்தோ சாடி அப்துல் ரஹ்மான் மற்றும் சுயேட்சை வேட்பாளர் கோல்டாம் ஹாமிட் ஆகியோருக்கு இடையே பலப்பரீட்சை நிலவுகிறது.
அதே நேரம் லாமாக் நேரடிப் போட்டி நிலவுகிறது. இங்கு தேசிய முன்னணியின் முஹமட் இஸ்மாயில் ஆயோப் மற்றும் வாரிசான் கட்சியின் மஸ்லிவாத்தி அப்துல் மாலிக் ஆகியோர் நேருக்கு நேர் மோதுகின்றனர்.
மாலை 5.30 மணியுடன் வாக்குப் பதிவு நிறைவடையும் நிலையில், தேர்தல் முடிவுகள் இன்று இரவே வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
























