கோலாலம்பூர்:
மலேசியாவில் இந்த ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் இன்று வரை மொத்தம் 2,917 திறந்தவெளி தீ விபத்துகள் பதிவாகியுள்ளன. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 300 விழுக்காடு அதிகமாகும்.
இந்த விபத்துக்களால் சுமார் 328 ஹெக்டேர் நிலப்பரப்பு பாதிக்கப்பட்டுள்ளது. இதில் 287 ஹெக்டேர் பரப்பளவில் தீ அணைக்கப்பட்டுவிட்டது. மீதமுள்ள 41 ஹெக்டேர் பரப்பில் தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
2025-இல் 729 வழக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தன. அதேநேரம் 2024-இல் வெறும் 66 வழக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் புதர் காடுகளில் ஏற்படும் தீ விபத்துகளே (Bushfires) அதிகபட்சமாக 75 விழுக்காடு (2,187 வழக்குகள்) பதிவாகின்றன. மேலும், சட்டவிரோதக் குப்பைக் கிடங்குகளில் ஏற்படும் தீயும் இந்த அதிகரிப்புக்கு முக்கியக் காரணமாகும்.
மலேசிய வானிலை ஆய்வு மையத்தின் (MetMalaysia) கணிப்பின்படி, ஜனவரி 31-ஆம் தேதி வரை நிலவும் கடும் வெப்பம், வறட்சி மற்றும் பலத்த காற்று காரணமாகத் தீ விபத்துகள் பரவும் அபாயம் அதிகமாக உள்ளது. குறிப்பாகத் தீபகற்ப மலேசியாவின் வட மாநிலங்களில் இந்த பாதிப்பு அதிகமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
தற்போது ஜோகூர் மாநிலத்தில் பின்வரும் இடங்களில் தீயணைப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன:
- சுங்கை கபால் (Sungai Kapal)
- தாமான் பாயு டாமாய் (Taman Bayu Damai)
- தேசா செலாத்தான் கம்போங் லெபாவ் (Kampung Lepau)
- பண்டார் பெனாவார் புக்கிட் துவாத்தாவ் (Bandar Penawar) குப்பைக் கிடங்கு.
தீயணைப்புத் துறை மிக உயர்ந்த தயார் நிலையில் உள்ளதாகவும், பொதுமக்கள் எக்காரணம் கொண்டும் திறந்தவெளியில் குப்பைகளையோ அல்லது புதர்களையோ எரிக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். விதிமுறைகளை மீறுபவர்கள் மீது சுற்றுச்சூழல் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.




















