பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் மீது வழக்குப் பதிவு

பெங்களூரு,கன்னட திரையுலகின் பிரபல நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான ‘காந்தாரா சாப்டர்-1’ படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த படம் கர்நாடகத்தில் கடலோர மாவட்டங்களில் துளுமொழி பேசும் மக்களின் தெய்வமாக விளங்கும் தெய்வா சாமியை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையில், கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் இந்தி நடிகர் ரன்வீர் சிங் கலந்துகொண்டார்.

நடிகர் ரன்வீர் சிங், அரங்கில் அமர்ந்திருந்த ரிஷப் ஷெட்டியிடம் காந்தாரா படத்தில் வரும் காட்சியை ஜாலியாக நடித்துக் காண்பித்தார். பின்பு மேடையில் பேசிய அவர், “காந்தாரப் படத்தை தியேட்டரில் பார்த்தேன். ரிஷெப் ஷெட்டியின் நடிப்பு பிரமாதமாக இருந்தது. குறிப்பாக அந்த பெண் ஆவி, ரிஷெப் ஷெட்டிக்குள் புகுந்த பிறகு அவர் நடித்த நடிப்பு…” என சொல்லி படத்தில் வரும் தெய்வ கதாபாத்திரத்தின் முகபாவனைகளை செய்து காண்பித்தார். இது சர்ச்சையை உருவாக்கியது. இதற்காக துளுமொழி பேசும் மக்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுக்க தொடங்கியதால், ரன்வீர் சிங் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டார். துளுமக்களின் மனம் புண்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்பதாகவும் அவர் கூறியிருந்தார். ரன்வீர்சிங் மன்னிப்பு கேட்டதால், இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

பெங்களூரு ஐகிரவுண்டு போலீஸ் நிலையத்தில் நடிகர் ரன்வீர் சிங் மீது வக்கீல் பிரசாந்த் மதல் ஒரு புகார் அளித்துள்ளார். அதில், நடிகர் ரன்வீர் சிங் பேச்சு, நடவடிக்கை லட்சக்கணக்கான இந்துகள் மற்றும் கர்நாடகத்தில் துளுமொழி பேசும் மக்களின் மனதை புண்படுத்தி உள்ளது. அதனால் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அந்த புகாரை போலீசார் பெற்றுக்கொண்டனர். புகார் குறித்து உயர் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசித்து நடிகர் ரன்வீர் சிங் மீது வழக்குப்பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று ஐகிரவுண்டு போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக தற்போது பெங்களூரு காவல் துறையில் ரன்வீர் சிங் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவரை கைது செய்ய புகார்தாரர் கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here