மோட்டார் சைக்கிளில் சென்றவரை சட்டையணியாத ஒருவர் தாக்கிய சம்பவம் குறித்து போலீஸ் விசாரணை

காஜாங்:

ஜாலான் உத்தமா செராஸ் பெர்டானாவில், இரு மோட்டார் சைக்கிளை உட்படுத்திய விபத்து மற்றும் அதனைத்தொடர்ந்து நடந்ததாக நம்பப்படும் தாக்குதல் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் ஒரு வாகன டாஷ்போர்டு வீடியோ பரவியது குறித்து காஜாங் மாவட்ட காவல்துறை தலைமையகத்திற்கு (IPD) இன்று நண்பகல் 12.09 மணிக்கு புகார் கிடைத்தது என்று, காஜாங் மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் முகமட் ஜெய்த் ஹாசன் கூறினார்.

கடந்த வெள்ளிக்கிழமை முற்பகல் 11.25 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.

“சட்டை அணியாத ஒருவர் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது பிரதான வீதியின் ஊடாகச் சென்ற மற்றுமொரு மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென மோதியது. அதன் பின்னர் சட்டை அணியாத மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை கை, கால்களால் தாக்கியது போன்ற வீடியோ டெலிகிராமில் வைரலாகியது,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இருப்பினும் சம்பந்தப்பட்ட தரப்பினரிடமிருந்து விபத்து அல்லது சம்பவம் குறித்து இதுவரை காவல்துறைக்கு எந்த புகாரும் வரவில்லை என்று முகமட் ஜைட் கூறினார்.

“இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் பிரிவு 279 மற்றும் குற்றவியல் சட்டத்தின் பிரிவு 323 இன் படி விசாரிக்கப்படுகிறது என்றும் சம்பவம் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள், அருகிலுள்ள எந்த காவல்துறை நிலையத்தையும் தொடர்பு கொள்ளலாம் அல்லது வழக்கின் விசாரணை அதிகாரியான இன்ஸ்பெக்டர் முவாஸ் மஸ்லானை 017-9788804 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here