பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுவதுபோல் இஸ்‌ரேல் – ஹமாஸ் யுத்தத்தின் பின் இந்த நாடுகள்.

அகதிகளுக்கும் நிதியுதவி, ஆயுதங்களுக்கும் நிதியுதவி – இது போர் அரசியல்!

ஒரு பக்கம் இஸ்ரேலுக்கு ராணுவ உதவிகளும் ஆயுதங்களும் வழங்கிக்கொண் டிருக்கும் அதே நாடுகள்தான், இன்னொரு பக்கம் பாலஸ்தீன அகதிகளுக்கான நிவார ணப் பணிகளுக்கு நிதியுதவியும் செய்கின்றன என்பதுதான் முரண்பாடுகள் நிறைந்த உண்மை.

தவறுதலாக ஒரு மருத்துவமனை மீது குண்டு வீசித் தாக்குவது தீவிரவாதம் ஆகாது – இஸ்‌ரேலின் தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு சுமார் 40 ஆண்டு களுக்கு முன்பு இப்படிப் பேசிய வீடியோ ஒன்று, காஸாவில் மருத்துவமனை தாக்கப் பட்டு 200-க்கும் மேற்பட்டவர்கள் பலியான சூழலில் சமூக வலைத்தளங்களில் வைர லாகி வருகிறது. பாலஸ்தீனர்கள் மீது இஸ்‌ரேல் எப்படிப்பட்ட ஒடுக்குமுறையை நிகழ்த்தி வருகிறது என்பதற்கு வரலாற்றுச் சாட்சி அது.

ஹமாஸ் அமைப்பினர் அத்துமீறி இஸ்‌ரேலில் நுழைந்து அப்பாவிப் பொதுமக்கள்மீது தாக்குதல் நடத்தி ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களைக் கொன்றார்கள். 200-க்கும் மேற்பட்டவர்களைப் பிணைக்கைதிகளாக சிறைபிடித்துக்கொண்டு வந்தனர்’ என்பதுதான் குற்றச்சாட்டு”.

இஸ்‌ரேலின் பின்னால் உலகமே திரள்வதற்கும், ஹமாஸைக் கண்டிப்பதற்கும் இதுவே காரணமாக இருந்தது. இஸ்‌ரேலின் தற்போதைய தாக்குதலுக்கும் நியாயத்தைக் கொடுத்தது. ஆனால், இஸ்ரேல் என்ன செய்கிறது?

ஒரு புள்ளிவிவரம். காஸா பகுதியில் முதல் 12 நாள்களில் இஸ்ரேல் நிகழ்த்திய தாக்கு தல்களில் பலியானவர்கள் 4,000 பேர். இவர்களில் நூற்றுக்கணக்கான குழந்தைகளும் அடக்கம். 11 ஆயிரம் பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதுதவிர, ஹமாஸ் இயக்கம் என்ற சந்தேகத்தில் நூற்றுக்கணக்கானவர்களைக் கைது செய்துள்ளது இஸ்ரேல் ராணுவம்.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவம் ஓராண்டு காலத்தில் நடத்திய குண்டுவீச்சுத் தாக்குதல்களைவிட காஸாவில் ஒரே வாரத்தில் இஸ்ரேல் நிகழ்த்திய குண்டுவீச்சு களின் எண்ணிக்கை அதிகம்.

காஸாவின் பரப்பளவு 365 சதுர கி.மீ. ஆப் கானிஸ்தானின் பரப்பளவு 652,864 சதுர கி.மீ. ஒப்பிடும்போது காஸாவை விட ஆப் கானிஸ்தான் 178,770% பெரிய நிலப்பரப்பு. இவ்வளவு சிறிய நிலத்துண்டில் இஸ்ரேல் நிகழ்த்தும் குண்டுவீச்சுக்கு மருத்துவமனைகள், ஐ.நா கட்டுப்பாட்டில் இருக்கும் அகதி கள் முகாம்கள், மசூதிகள், தேவாலயங்கள் என்று எதுவுமே தப்பவில்லை.

ஹமாஸை வீழ்த்துவதற்கு இஸ்‌ரேலுக்கு தார்மீக நியாயங்கள் உண்டு என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், இப்படிக் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தும் இஸ்‌ரேல் யுத்தம் செய்வது ஹமாஸுக்கு எதிராகவா? அல்லது ஒட்டுமொத்த பாலஸ்தீன மக்களுக்கு எதிராகவா? அல்லது ஐ.நா சபைக்கு எதிராகவா?

ஹமாஸ் இப்போது நிகழ்த்தியது மிகப்பெரிய தாக்குதல் என்பதால் உலகத்துக்கே தெரிந்தது. ஆனால், கடந்த 15 ஆண்டுகளாக இஸ்‌ரேல் ராணுவத்துக்கும் பாலஸ்தீன மக்கள் மற்றும் குழுக்களுக்கும் இடையே நடந்த மோதல்களில் பாலஸ்தீனத் தரப்பில் ஏற்பட்ட உயிரிழப்புகள் 6,407. இஸ்ரேல் தரப்பில் உயிரிழப்புகள் 308.

ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு என வகைப்படுத்தினால் , இஸ்ரேல் அரசுக்கும் ராணுவத்துக்கும் என்ன பெயர் வைப்பது?

இவ்வளவு மோசமான கொடுமைகள் நடக்கும் சூழலில், காஸாவிலிருந்து அகதிகளாக வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் புகுவதற்கு நிறைய பேர் விரும்புகிறார்கள். 23 லட்சம் பேர் வசிக்கும் அந்த நிலப்பரப்பைத் தாண்டிவிட்டால், குறைந்தபட்சம் உயிர் பிழைத்திருப்பதற்கு உத்தரவாதம் உண்டு என்பதே காரணம். ஆனால், அவர்களை அகதிகளாக ஏற்பதற்கு எகிப்து, ஜோர்டான் போன்ற அண்டை நாடுகள் தயாராக இல்லை.

“காஸா மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதல், அப்பாவி பாலஸ்தீனர்களை அகதிகளாக அண்டை நாடுகளுக்கு வெளியேற்றுவதற்கான தந்திரம். எகிப்து எவரையும் அகதிகளாக ஏற்காது” என்று அந்த நாட்டு அதிபர் எல் சிசி அறிவித்துவிட்டார்.

ஜோர்டான் மன்னர் அப்துல்லாவும் இதேபோன்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார். சக இஸ்லாமிய நாடுகளே பாலஸ்தீனர்களுக்கு அடைக்கலம் கொடுக்க மறுப்பதற்கு கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ஆனால், பாலஸ்தீன அகதிகளை இந்த இரண்டு நாடுகளும் ஏற்க மறுப்பதற்கு வரலாற்றுக் காரணங்கள் உள்ளன. கடந்த 1948-ம் ஆண்டு இஸ்ரேல் உருவாக்கப்பட்ட உடனே, அதற்கும் அரபு நாடுகளுக்கும் கடுமையான போர் வெடித்தது. அந்தப் போர்க் காலத்தில் சுமார் ஏழு லட்சம் பாலஸ்தீனர்கள் அகதிகளாக அங்கிருந்து வெளியேறினர். இது ‘பேரழிவு’ என்று அரேபியர்களால் வர்ணிக்கப்படுகிறது.

அந்தப் போர் முடிந்தபிறகு பாலஸ்தீன அகதிகள் மீண்டும் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்புவதை இஸ்ரேல் தடை செய்தது. இடைப்பட்ட காலத்துக்குள் யூதக் குடி யேற்றங்கள் பெருமளவில் நிகழ்ந்திருந்தன. பாலஸ்தீனர்கள் மீண்டும் வந்தால், அவர் களின் எண்ணிக்கை யூதர்களின் எண்ணிக்கையைவிட அதிகரித்துவிடும் என்று இஸ்ரேல் பயந்தது. அதனால் இந்தத் தடை.

1967-ம் ஆண்டு மீண்டும் போர் நடந்தபோது மூன்று லட்சம் பாலஸ்தீனர்கள் அகதி களாக ஜோர்டான் உள்ளிட்ட நாடுகளுக்குத் தப்பி ஓடினர். அப்போதும் போர் முடிந்த பிறகு அவர்கள் நாடு திரும்புவதற்கு இஸ்ரேல் அனுமதிக்கவில்லை. இப்படி ஒவ்வொரு போர் மற்றும் தாக்குதலின்போதும் பாலஸ்தீனர்கள் நாட்டைவிட்டு வெளியேறுவதை இஸ்ரேல் விரும்புகிறது. ‘இதன்மூலம் இஸ்ரேலில் பாலஸ்தீன மக்களின் எண்ணிக்கை குறையும், அவர்களின் சுயாட்சி கோரிக்கை இன்னும் பலவீனமாகும்’ என்று நினைக்கிறது இஸ்ரேல். எகிப்து அதிபர் இதை வெளிப்படையாகவே சொல்லிவிட்டார்.

இன்னொரு பக்கம், அகதிகளுடன் ஆயுதம் தாங்கிய போராளிகளும் கலந்து வந்து விடுவதும் பிரச்னையாக உருவெடுக்கிறது. லெபனான் நாட்டில் இருக்கும் ஹிஸ் புல்லா தீவிரவாதிகள் அடிக்கடி இஸ்ரேல் ராணுவத்தைத் தாக்குவதால், இஸ்ரேலின் கடுமையான தாக்குதலை லெபனான் எதிர்கொள்ள நேரிடுகிறது. இதேபோல ஹமாஸ் அமைப்பினர் அகதிகளுடன் கலந்து வந்து எகிப்து அல்லது ஜோர்டானில் தங்கியிருந்து இஸ்ரேல் மீது தாக்குதல் தொடுத்தால், அந்த நாடுகளின் அமைதி குலையும். அதையும் எகிப்தோ, ஜோர்டானோ விரும்பவில்லை.

ஏற்கெனவே, ‘போதும்… போதும்…’ என்று சொல்கிற அளவுக்கு அகதிகள் இந்தப் பிரதேசத்தின் எல்லா நாடுகளிலும் நிறைந்திருக்கிறார்கள். சொந்த நாட்டில் அகதிக ளாக வாழ்வது ஒருவகை துயரம், சொந்த மண்ணிலிருந்து வெளியேற்றப்பட்டு வேற்று நாடுகளின் அகதி முகாம்களில் முடங்கி வாழ்வது இன்னொரு வகை துயரம். பாலஸ் தீனர்கள் அளவுக்கு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் அகதிகளாக வாழும் சமூகம் வேறெதுவும் இருக்க முடியாது.

கடந்த 2019-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, ஐ.நா சபையிடம் பதிவு செய்துள்ள பாலஸ்தீன அகதிகள் 56 லட்சம் பேர். இன்று அந்த எண்ணிக்கை இன்னும் அதிகரித் திருக்கலாம். பாலஸ்தீன சுயாட்சிப் பிரதேசமான மேற்குக் கரை மற்றும் காஸா, அண்டை நாடுகளான ஜோர்டான், லெபனான், சிரியா ஆகிய இடங்களில் ஐ.நா அமைத்துள்ள 68 முகாம்களில் பாலஸ்தீன அகதிகள் கணிசமாக வசிக்கிறார்கள்.

காஸாவில் வசிக்கும் 23 லட்சம் பேரில் 12 லட்சத்து 76 ஆயிரம் பேர் உள்நாட்டு அகதிகள். முகாம்களில் தஞ்சமடைந்திருப்பவர்கள். இதேபோல மேற்குக்கரையில் 7 லட்சத்து 74 ஆயிரம் அகதிகள் ஐ.நா-வின் 19 முகாம்களில் வசிக்கிறார்கள்.

அண்டை நாடுகளில் அதிக அகதிகளுக்கு அடைக்கலம் கொடுத்திருப்பது ஜோர்டான். அங்கு மட்டுமே 21 லட்சத்து 17 ஆயிரம் பாலஸ்தீன அகதிகள் வாழ்கிறார்கள். 75 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு வசிக்கும் அகதிக் குடும்பங்கள் உண்டு. இதனால் உள்ளூர் மக்களுடன் இவர்கள் இரண்டறக் கலப்பதும் நடந்திருக்கிறது. கிட்டத்தட்ட முக்கால்வாசி அகதிகளுக்கு ஜோர்டான் நாடு குடியுரிமை கொடுத்திருக்கிறது. அதனால் அவர்கள் உள்ளூர் மக்கள் போலவே எல்லாவற்றையும் பெறுகிறார்கள். ஜோர் டானின் மக்கள்தொகையில் சரிபாதி அளவுக்கு பாலஸ்தீன மூதாதையர்களைக் கொண்டவர்கள் இருக்கிறார்கள்.

சிரியாவில் 5 லட்சத்து 28 ஆயிரம் பாலஸ்தீன அகதிகள் இருக்கிறார்கள். அவர்களுக் குக் குடியுரிமை கொடுக்காவிட்டாலும், ராணுவத்தில் சேர்ப்பது வரை வேலைவாய்ப் புகளை சிரியா அரசு கொடுக்கிறது. சிரியாவில் உள்நாட்டுப் போர் வந்து நிலைமை மோசமானபோது, இவர்களில் பலர் அங்கிருந்து தப்பித்து ஐரோப்பிய நாடுகளில் அடைக்கலம் தேடினார்கள்.

    லெபனான் நாட்டில் 4 லட்சத்து 52 ஆயிரம் பேர் இருக்கிறார்கள். இவர்களுக்கு வேலை வாய்ப்பு, சொத்து வாங்கும் உரிமை, சமூக நலத் திட்டங்கள் என்று எதையும் அமல் செய்யாமல் அகதிகளாகவே வைத்திருக்கிறது அந்த நாடு. இதுதவிர சவுதி அரேபியா, இராக், எகிப்து என்று ஏராளமான நாடுகளில் பாலஸ்தீன அகதிகள் தஞ்சமடைந் திருக்கிறார்கள்.

முதல் அரபு – இஸ்ரேல் போர் நடந்து முடிந்த 1948-ம் ஆண்டிலேயே ஐ.நா பொதுச் சபையில் ‘பாலஸ்தீன அகதிகளுக்கு தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பிச் சென்று தங்களுக்கு உரிமையான வீடுகளில் வசிக்கும் உரிமை உண்டு’ என்று தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. அது செல்லாக் காகிதமாக இன்னமும் காற்றில் படபடத்துக் கொண் டிருக்கிறது.

ஒரு பக்கம் இஸ்ரேலுக்கு ராணுவ உதவிகளும் ஆயுதங்களும் வழங்கிக்கொண்டிருக் கும் அதே நாடுகள்தான், இன்னொரு பக்கம் பாலஸ்தீன அகதிகளுக்கான நிவாரணப் பணிகளுக்கு நிதியுதவியும் செய்கின்றன என்பதுதான் முரண்பாடுகள் நிறைந்த உண்மை.

பாலஸ்தீன அகதிகள் மற்றும் அவர்களின் வம்சாவளியினருக்கு நிவாரண உதவிகள் வழங்குவதற்காக United Nations Relief and Works Agency for Palestine Refugees in the Near East (UNRWA) என்ற திட்டத்தை ஐ.நா சபை உருவாக்கியது. கல்வி, மருத்துவ உதவி, மாற்றுத் திறனாளிகளுக்கு மறுவாழ்வு, தொழில் பயிற்சிகள் என்று பல்வேறு சேவை களை இந்தத் திட்டத்தின் மூலம் கடந்த 1949 முதல் ஐ.நா செய்துவருகிறது. இந்த சேவைகளைச் செய்வதற்காக சுமார் 30 ஆயிரம் பணியாளர்களை நியமித்திருக்கிறது ஐ.நா. இவர்கள் அத்தனை பேரும் பாலஸ்தீன அகதிகள் குடும்பத்தினர்தான்!

பாலஸ்தீன அகதிகளுக்கான நிவாரணப் பணிகளுக்கு அதிக நிதியுதவி செய்வது ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும்தான். அரபு நாடுகளும் கணிசமான உதவி களை வழங்குகின்றன. குறிப்பாக, அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், சவுதி அரே பியா, ஸ்வீடன், இங்கிலாந்து, நார்வே, ஜப்பான், சுவிட்சர்லாந்து, ஆஸ்திரேலியா, டென்மார்க், குவைத், பிரான்ஸ், பெல்ஜியம், ஜெர்மனி ஆகிய நாடுகள் கணிசமாக நிதியுதவி வழங்குகின்றன.

இவற்றில் அமெரிக்கா, நெதர்லாந்து, பெல்ஜியம், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் அவ் வப்போது நிதியுதவியை நிறுத்தி வைக்கும். ஐ.நா முறையிட்ட பிறகு திரும்பக் கொடுக்கும். திடீரென நிதியுதவி தொகையைக் குறைக்கும். இதெல்லாம் நிவாரணப் பணிகளைச் சீராகச் செய்யவிடாமல் ஐ.நா-வை தடுமாற வைக்கும்.

கடந்த 1993 முதல் நாடுகள் பலவும் ஐரோப்பிய யூனியன் மூலமாகவும், தனித் தனியாகவும் கொடுத்த பங்களிப்புதான் பாலஸ்தீனர்களுக்கான உதவிகளில் அதிகம். அரபு நாடுகள் பலவும் பாலஸ்தீன சுயாட்சிப் பிரதேச அரசுக்கும் நிதியுதவி செய்ய வேண்டியிருப்பதால், அகதிகளுக்குக் குறைவாகவே கொடுக்கின்றன.

ஒருபுறம் இஸ்ரேலின் தாக்குதலை ஆதரித்து பாலஸ்தீன அகதிகளின் துயரை அதி கமாக்கிவிட்டு, அந்த அகதிகளுக்கு நிவாரணமும் வழங்கும் இந்த நாடுகளின் உளவி யல்தான் புரிந்துகொள்ள முடியாத புதிர். அந்தப் புதிரே, காஸா துண்டு நிலத்தில் வாழும் 23 லட்சம் பாலஸ்தீனர்களுக்கு அந்த நிலத்தை திறந்தவெளி சிறைச்சாலை ஆக்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here