சிங்கப்பூர், பிப்ரவரி 6, 2026:
சிங்கப்பூருக்குள் நுழையும் வெளிநாட்டுப் பதிவு பெற்ற வாகனங்களுக்கான நுழைவு அனுமதி (VEP) கட்டணம் மற்றும் இதர சாலைக் கட்டணங்கள் வரும் 2027 ஜனவரி 1-ஆம் தேதி முதல் கணிசமாக உயர்த்தப்பட உள்ளன.
அத்துடன் தற்போது நடைமுறையிலுள்ள சில இலவசச் சலுகைகளும் ரத்து செய்யப்படவுள்ளதாக நிலப்போக்குவரத்து ஆணையம் (LTA) அறிவித்துள்ளது.
சிங்கப்பூரில் வாகனங்களை வாங்கிப் பயன்படுத்துவதற்கான செலவு அதிகரித்துள்ள நிலையில், வெளிநாட்டு வாகனங்களுக்கும் அந்தச் செலவைச் சமன்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
VEP எனப்படும் வெளிநாட்டு வாகன நுழைவு அனுமதி உரிமம் கார்களுக்கு ஒரு நாளுக்கு $50 எனவும் மோட்டார்சைக்கிள்களுக்கு $7 எனவும் உயர்த்தப்படும். தற்போது அது கார்களுக்கு $35 எனவும் மோட்டார்சைக்கிள்களுக்கு $4 எனவும் உள்ளது.
ஜனவரி 2027ஆம் ஆண்டு 1ஆம் தேதி முதல் வார இறுதிகளையும் சிங்கப்பூர் பொதுவிடுமுறை நாள்களையும் தவிர்த்து, அனைத்து நாள்களுக்கும் வெளிநாட்டு வாகனங்கள் நுழைவுக் கட்டணம் செலுத்தவேண்டியிருக்கும்.
தற்போது வார இறுதிகளிலும் சிங்கப்பூர் பொதுவிடுமுறை நாள்களிலும் ஓர் ஆண்டில் 10 குறிப்பிட்ட நாள்களிலும் இலவசமாக வெளிநாட்டு வாகனங்களும் மோட்டார்சைக்கிள்களும் சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதி உள்ளது.



















