கோலாலம்பூர்:
மலேசியாவில் மானிய விலையில் வழங்கப்படும் RON95 பெட்ரோல் கசிவைத் தடுக்க, வெளிநாடுகளில் பதிவு செய்யப்பட்ட கடன் அட்டைகளைப் பெட்ரோல் நிலையங்களில் உள்ள கட்டண இயந்திரங்களில் (Outdoor payment terminals) பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்துவது குறித்து உள்நாட்டு வணிகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு ஆய்வு செய்து வருகிறது.
தற்போது வெளிநாட்டு வாகனங்களுக்கு RON95 பெட்ரோல் விற்பனை செய்யும் பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால், ஏப்ரல் 1, 2026 முதல் அமலுக்கு வரவுள்ள புதிய விதியின்படி, மானிய பெட்ரோலை வாங்கும் வெளிநாட்டு வாகன உரிமையாளர்கள் அல்லது ஓட்டுநர்கள் மீதும் நேரடிச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
வெளிநாட்டுக் கடன் அட்டைகளைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்துவதன் மூலம், வெளிநாட்டினர் மானிய பெட்ரோலைப் பெறுவதைத் தொழில்நுட்ப ரீதியாகத் தடுக்க அரசு முயன்று வருகிறது.
அத்தோடு ‘ஓப்ஸ் சமார்’ (Ops Samar) எனும் ரகசியக் கண்காணிப்பு நடவடிக்கைகள் மூலம் பெட்ரோல் நிலையங்களில் முறைகேடுகள் நடக்கும் இடங்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்படும்.
மானிய பெட்ரோல் விற்பனை செய்ய மறுக்கும்போது, பெட்ரோல் நிலைய ஊழியர்களுக்கு விடுக்கப்படும் மிரட்டல்கள் அல்லது மனிதாபிமானமற்ற செயல்களை அரசு ஒருபோதும் அனுமதிக்காது. இத்தகைய செயல்கள் குற்றவியல் சட்டங்களின் கீழ் வரும் என்பதால், பாதிக்கப்பட்ட ஊழியர்கள் உடனடியாகப் போலீசில் புகார் அளிக்க வேண்டும் என்று அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
மலேசியாவில் தற்போது BUDI95 திட்டத்தின் கீழ், தகுதியுள்ள மலேசியர்களுக்கு மாதம் 300 லிட்டர் வரை RON95 பெட்ரோல் லிட்டருக்கு RM1.99 என்ற மானிய விலையில் வழங்கப்படுகிறது. மலேசியர் அல்லாதவர்கள் மற்றும் வெளிநாட்டு வாகனங்கள் சந்தை விலையிலேயே பெட்ரோல் வாங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

























