பேங்காக்:
தாய்லாந்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுத்தேர்தலில், பிரதமர் அனுட்டின் சார்ன்விராகுல் தலைமையிலான பழமைவாத பூம்ஜாய்தாய் கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றி மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது.
தாய்லாந்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள முதற்கட்டத் தகவல்களின்படி, 500 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் கட்சிகள் பெற்றுள்ள இடங்கள்:
பூம்ஜாய்தாய் கட்சி: சுமார் 193 இடங்கள் (மிகப்பெரிய கட்சி).
பீப்பிள்ஸ் பார்ட்டி (People’s Party): 117 இடங்கள் (இரண்டாம் இடம்).
பியூ தாய் கட்சி (Pheu Thai): 74 இடங்கள் (மூன்றாம் இடம்).
தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அனுட்டின் சார்ன்விராகுல்: “பூம்ஜாய்தாய் கட்சியின் இந்த வெற்றி, அனைத்து தாய்லாந்து மக்களுக்குமான வெற்றி. நீங்கள் எங்களுக்கு வாக்களித்திருந்தாலும் இல்லாவிட்டாலும், தாய்லாந்து மக்களுக்கு எங்களது முழுத் திறமையுடன் பணியாற்றுவோம்,” என்று தெரிவித்தார்.
எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மைக்குத் தேவையான 251 இடங்கள் கிடைக்காததால், அனுட்டின் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைய உள்ளது. பூம்ஜாய்தாய் கட்சியுடன் அதன் நட்பு கட்சியான கிளா தம் (Kla Tham) கட்சி (60 இடங்கள்) இணைய வாய்ப்புள்ளது.
கடந்த இரு தசாப்தங்களில் தாய்லாந்தில் பழமைவாதக் கட்சி ஒன்று இவ்வளவு பெரிய வெற்றியைப் பெறுவது இதுவே முதல்முறை எனக் கருதப்படுகிறது.
எல்லையோரப் பாதுகாப்பு, தேசியம் மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை முன்வைத்து அனுட்டின் மேற்கொண்ட பரப்புரை அவருக்குப் பெரும் வெற்றியைத் தேடித்தந்துள்ளது.
தேர்தலுடன் சேர்த்து நடத்தப்பட்ட பொதுவாக்கெடுப்பில், சுமார் 60% மக்கள் நாட்டின் அரசியலமைப்பை மாற்றியமைக்க ஆதரவு தெரிவித்துள்ளனர்.
முற்போக்குச் சிந்தனை கொண்ட பீப்பிள்ஸ் பார்ட்டி மற்றும் ஒருகாலத்தில் செல்வாக்குடன் இருந்த பியூ தாய் கட்சி ஆகியவை இந்தத் தேர்தலில் கடும் பின்னடைவைச் சந்தித்துள்ளன. பீப்பிள்ஸ் பார்ட்டி தலைவர் நத்தபோங் ருயேங்பான்யாவூத், மக்கள் தீர்ப்பை ஏற்பதாக அறிவித்துள்ளார்.




















