கோலாலம்பூர்:
ஆலயங்கள் மீதான ஒரு சில அண்மைய அறிவிப்புகள் மற்றும் ஜம்ரி வினோத் போன்ற பொறுப்பற்றவர்களின் குறைகூறல்கள் அனைத்தும் மலேசிய இந்துக்களுக்கு அச்சுறுத்தலையும், அச்சத்தையும் ஏற்படுத்தியிருப்பதைக் கருத்தில் கொண்டு, ம.இ.காவும் மலேசிய இந்து சங்கமும் இணைந்து நாடு தளுவிய அளவில் ஆலயங்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சனைகளைக் களைவதற்கும், அவர்களுக்குத் துணை செய்வதற்கும் ஒருங்கிணைந்து செயல்படவிருக்கின்றன. ஒவ்வொரு மாநில ம.இ.கா அலுவலகமும் இதற்கான செயலகமாக செயல்படும்.
இந்து சங்கத்தோடு இணைந்து அந்தந்த மாநிலங்களில் ஏற்பட்டிருக்கின்ற ஆலயப் பிரச்சனைகள், நிலப் பிரச்சனைகள்; அதற்கு என்ன மாதிரியான தீர்மானங்களையும், ஆலோசனைகளையும் வழங்க முடியும் என்பதனை ஆலோசிக்கும். அதே நேரத்தில் அந்தந்த மாநில அரசிற்கு என்ன மாதிரியான வேண்டுகோளையும், தீர்வுகளையும் முன்வைக்க வேண்டும் என்று ஆராய்வதற்கும் அந்தந்த மாநிலங்களில் இணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இதற்கு ம.இ.காவின் தேசியத் தலைவர் தான் ஸ்ரீ விக்னேஸ்வரன் அவர்களும். மலேசிய இந்து சங்கத்தின் தேசியத் தலைவர் தங்கபூஷன் அவர்களும் ஒருமித்த கருத்தோடு இந்த நடவடிக்கைக்கு முழு ஆதரவு தந்துள்ளார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மலேசிய இந்துக்கள் அனைவரும் இந்த சூழலை எதிர்கொள்ள ஒன்றிணைந்து செயல்படுவோம். மாநில ம.இ.கா பொறுப்பாளர்களும், இந்து சங்கப் பொறுப்பாளர்களும் உடனடியாக இதற்கான நடவடிக்கையில் இறங்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
























