பினாங்கில் RM2.2 மில்லியன் மதிப்புள்ள 30 கிலோ போதைப்பொருள் பறிமுதல்: ஒருவர் கைது

கோலாலம்பூர்:

பினாங்கில் சுமார் RM2.185 மில்லியன் மதிப்புள்ள 30 கிலோ போதைப்பொருட்களைக் கடத்திய ஒரு கும்பலை போலீசார் முறியடித்துள்ளனர். இது தொடர்பாக 37 வயதுடைய உள்ளூர் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று மதியம் சுமார் 4.25 மணியளவில், ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் வாகன நிறுத்துமிடத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

விசாரணையில், சந்தேக நபர் தனது காரில் ஒரு ரகசிய அறையில் போதைப்பொருட்களை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்தக்காரில் இருந்த 37 வயது நபரை போலீசார் கைது செய்தனர்.

அவரிடமிருந்து சுமார் 19.7 கிலோ ஷாபு (Syabu), 3.7 கிலோ MDMA பவுடர், 5.1 கிலோ எக்ஸ்டஸி (Ecstasy) மாத்திரைகள், 980.5 கிராம் கெட்டமைன் (Ketamine), 18,000 எரிமின் 5 (Erimin 5) மாத்திரைகள் என்பன பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் போதைப்பொருள் கலந்த ‘வேப்’ (Vape) திரவங்களை தயாரிக்கும் உபகரணங்கள் மற்றும் திரவ வடிவிலான போதைப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக பினாங்கு போலீஸ் தலைமை அதிகாரி டத்தோ அசிஸி இஸ்மாயில் கூறினார்.

இந்த போதைப்பொருள் கும்பல் கடந்த ஆண்டு அக்டோபர் முதல் இயங்கி வருவதாகத் தெரிவித்தார்.

பறிமுதல் செய்யப்பட்ட இந்த போதைப்பொருட்கள் சுமார் 1,00,000 பயனாளர்களுக்கு விநியோகம் செய்யப்படவிருந்தது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட நபருக்கு ஏற்கனவே போதைப்பொருள் தொடர்பான குற்றப்பின்னணி இருப்பதும், சோதனையில் அவர் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தது உறுதி செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கு 1952-ஆம் ஆண்டு ஆபத்தான போதைப்பொருள் சட்டத்தின் பிரிவு 39B-இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here