“கேங் வின்சென்ட்” மற்றும் “கேங் ரிச்சி” கும்பல்கள் சிக்கின; ஜோகூரில் 12 பேர் மீது குற்றச்சாட்டு!

ஜோகூர் பாரு:

வீடு மற்றும் கடைகளை உடைத்துத் திருடுவது மற்றும் இணையவழி பாலியல் மிரட்டல் (Online Sexual Extortion) மூலம் சுமார் RM4 மில்லியன் வரை நஷ்டத்தை ஏற்படுத்திய இரண்டு குற்றக் கும்பல்களைச் சேர்ந்த 12 பேர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதில் கேங் வின்சென்ட் (Geng Vincent) கும்பலைச் சேர்ந்த 6 பேர்; எம். விமலன்ராஜ் (27), எம். நாகேஸ்வரன் (33), குயெக் பெய் லின் (20 – பெண்), டாமி வூ (28), அப்துல் ரஹூபூர் ரஹீம் இட்ரிஸ் (31) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

மார்ச் 2025 முதல் ஜனவரி 15, 2026 வரை கூலாய், தாமான் லகெண்டா புத்ராவில் இந்தக் கும்பல் செயல்பட்டதாகக் கூறப்படுகிறது.

அதேநேரம் கெங் ரிச்சி (Geng Richi) கும்பலைச் சேர்ந்த 6 பேர் ; முகமட் ஹஸ்வான் சசாலி (38), எல். நவீந்திரன் (26), லிம் காம் வெங் (26), ஜே. ஜீவனேஸ்வரன் (25), ஐ. ரிச்சி (22), ஆர். கேசவ ராஜ் (20) ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

பிப்ரவரி 2024 முதல் செப்டம்பர் 21, 2025 வரை பாசிர் கூடாங், தாமான் சூரியாவில் இந்தக் கும்பல் செயல்பட்டதாகக் கூறப்படுகிறது.

இவர்கள் அனைவரும் குற்றவியல் சட்டத்தின் பிரிவு 130V(1)-ன் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். இது குற்றம் நிரூபிக்கப்பட்டால், 5 முதல் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

இது உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்பதால், இப்போதைக்கு எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குப் பிணை (Bail) வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.

கடந்த செவ்வாய்க்கிழமை (பிப். 10), காவல்துறைத் தலைமை இயக்குநர் (IGP) டத்தோ ஸ்ரீ முகமட் காலிட் இஸ்மாயில் கூறுகையில், ஒரு கும்பல் கொள்ளைச் சம்பவங்களிலும், மற்றொரு கும்பல் இணையவழி பாலியல் மிரட்டல் மூலமாக மக்களை ஏமாற்றிப் பணம் பறிப்பதிலும் ஈடுபட்டு வந்ததாகத் தெரிவித்தார். இவர்களது குற்றச்செயல்களால் பொதுமக்களுக்கு RM4 மில்லியனுக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டுள்ளது.

அலைபேசி தடயவியல் அறிக்கையைப் பெறுவதற்காக, இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை மார்ச் 12-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here