கோலாலம்பூர்:
மலேசிய இந்தியர்களை நாகரிகமற்றவர்கள் என விமர்சித்தும், சட்டவிரோதக் கோயில்கள் குறித்துக் சர்ச்சைக்குரிய கருத்துகளை முகநூலில் (Facebook) பதிவிட்டதற்காகவும் செக்கு சந்திரா என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (பிப்ரவரி 11) மாலை 3 மணியளவில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு, கோலாலம்பூர் டாங் வாங்கி (Dang Wangi) போலீஸ் தலைமையகத்தில் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
வெறும் கவன ஈர்ப்புக்காகவும், தனது தனிப்பட்ட அதிருப்தியை வெளிப்படுத்தவுமே அந்தப் பதிவைச் செய்ததாக விசாரணையின் போது அவர் ஒப்புக் கொண்டுள்ளார். வழக்கின் ஆதாரத்திற்காக அவரது அலைபேசியைப் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்நிலையில், கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ஃபாடில் மார்சுஸ் இது குறித்துக் கூறுகையில், செக்கு சந்திராவிற்கு எதிராக 1948 தேசத் துரோகச் சட்டம் (Sedition Act), குற்றவியல் சட்டம் பிரிவு 505 (பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தல்), 1998 மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம் (சமூக வலைதளங்களைத் தவறாகப் பயன்படுத்துதல்) ஆகிய சட்டங்களின் கீழ் விசாரணை நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.
இனம் (Race), மதம் (Religion), மற்றும் அரச பரம்பரை (Royalty) ஆகிய 3R சார்ந்த உணர்வுப்பூர்வமான விஷயங்களில் விளையாட வேண்டாம் எனப் பொதுமக்களுக்குப் போலீசார் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். “புகழுக்காகவோ அல்லது மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கவோ சமூக அமைதியைக் குலைக்கும் வகையில் பதிவிடுவோர் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என டத்தோ ஃபாடில் மார்சுஸ் வலியுறுத்தியுள்ளார்.




















