கூச்சிங்:
தனது அறையில் ஒன்றாக தங்கியிருக்கும் நண்பருடன் ஏற்பட்ட கைகலப்பில் பலத்த காயமடைந்த வாலிபர் ஒருவர், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
உயிரிழந்த இளைஞரும் அவரது சக ஊழியர்களும் நேற்று இரவு நடந்த ஒன்று கூடலில் (Social gathering) பங்கேற்றுள்ளனர். அப்போது அவர்கள் மது அருந்தியிருந்ததாக நம்பப்படுகிறது.
விருந்து முடிந்து வீடு திரும்பிய பின், அந்த இளைஞருக்கும் அவரது அறையில் ஒன்றாக தங்கியிருக்கும் நண்பருக்கும் (சக ஊழியர்) இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இது பின்னர் ஒரு கடுமையான சண்டையாக மாறியது.
தாக்குதலில் அந்த இளைஞர் மயக்கமடைந்தார். அவரது கண்கள் மற்றும் இடது கன்னத்தில் வீக்கம் இருந்ததாகவும், மூக்கைச் சுற்றி இரத்தம் காய்ந்து காணப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
தாக்குதலில் மயக்கமடைந்த இளைஞரைச் சந்தேக நபர் சரவாக் பொது மருத்துவமனைக்கு (HUS) அழைத்துச் சென்றுள்ளார். எனினும், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே அவரது துடிப்பு நின்றுவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர். காலை 7:12 மணியளவில் இது குறித்துப் போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது என்று, ண்டு மாவட்ட போலீஸ் தலைமை அதிகாரி சூப்பிரிண்டெண்டன் சுதிர்மான் கிராம் கூறினார்.
இந்த விவகாரம் தொடர்பாக 29 முதல் 33 வயதுடைய மூன்று சக ஊழியர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
விசாரணையின் ஒரு பகுதியாக ஒரு நான்கு சக்கர வாகனமும், சில அலைபேசிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட இளைஞரை மருத்துவமனையில் விட்டுவிட்டுத் தப்பியோடிய முக்கியச் சந்தேக நபரை (அறை நண்பர்) போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் பிரிவு 302-ன் கீழ் கொலையாக விசாரிக்கப்பட்டு வருகிறது.





















