ஆராவ், பிப்ரவரி 26, 2026:
பெர்லிஸ் மாநிலத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை மொத்தம் 21 காசநோய் (Tuberculosis – TB) பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக மாநில சுகாதார இயக்குநர் டாக்டர் கசாலி சிக் தெரிவித்துள்ளார்.
நேற்று ஆராவ் ரமலான் சந்தையில் நடைபெற்ற ‘உணவுப் பாதுகாப்பு விழிப்புணர்வு’ நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநிலத்தில் காசநோய் பாதிப்பு தற்போது கட்டுப்பாட்டுக்குள்ளேயே உள்ளது. மாவட்ட சுகாதார அலுவலகங்கள் மற்றும் கிளினிக்குகள் மூலம் நோய் பரவலைத் தடுக்கத் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.
ரமலான் சந்தைகளில் பொதுமக்களுக்குக் காசநோயின் அறிகுறிகள், தடுப்பு முறைகள் மற்றும் ஆரம்பக்காலப் பரிசோதனையின் முக்கியத்துவம் குறித்த தகவல்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
பின்வரும் அறிகுறிகள் இருப்பவர்கள் உடனடியாக அருகிலுள்ள சுகாதார நிலையங்களை அணுகி, சளிப் பரிசோதனை மற்றும் எக்ஸ்ரே (X-ray) செய்துகொள்ளுமாறு டாக்டர் கசாலி அறிவுறுத்தியுள்ளார்:
- நீண்ட கால இருமல்.
- உடல் எடை குறைதல்.
- பசியின்மை.
இந்தத் தொற்றுநோய் மேலும் பரவாமல் தடுக்க, ஆரம்பக்காலக் கண்டறிதல் மற்றும் முறையான சிகிச்சை அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.





















